வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: நீட் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இலவச பயிற்சி வகுப்பு, தாமதமாக துவங்கப்பட்டதால், சிலபஸ் முடிப்பதே குதிரைகொம்பு தான் என்ற, கருத்து எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு, மாவட்ட வாரியாக மையங்கள் அமைக்கப்பட்டு, சனிக்கிழமைதோறும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில், 10 மையங்களில் நடக்கும், நீட் வகுப்பில் பங்கேற்க, 550 மாணவர்கள் பதிவு செய்தனர். இவர்களுக்கு, நவ.,இறுதியில் தான், வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது வரை, ஐந்து வகுப்புகள் மட்டுமே நடந்துள்ளன. கொடுக்கப்பட்ட சிலபஸில் கால்பகுதி கூட, இதுவரை நடத்தி முடிக்கப்படவில்லை.
இம்மாத இறுதி வரை மட்டுமே, நீட் வகுப்பு நடத்த முடியும். மார்ச் மாதம் துவங்கிவிட்டால், பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வு, எழுத்துத்தேர்வு நடப்பதால், தொடர்ச்சியாக வகுப்புகள் நடக்காது.
ஏப்., மாதத்தில் தேர்வு முடிந்ததும், மீண்டும் நீட் வகுப்பு துவங்கினால் கூட, சிலபஸ் முடிப்பது இயலாத காரியம் என்ற கருத்து எழுந்துள்ளது.

மே மாதம் நீட் தேர்வு நடப்பதாக, உத்தேச அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், இலவச பயிற்சி வகுப்பு, தாமதமாக துவங்கியதால், மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்த, போதிய அவகாசம் இருக்காது என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
முதுகலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளில் சேரலாம். இதற்காக, கடந்த ஆட்சியில் இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக, நீட் வகுப்புகள் நடக்கவில்லை. நடப்பு கல்வியாண்டு திட்டமிட்டபடி துவங்கியும், நீட் வகுப்பு மட்டும், நவ.,இறுதியில்தான் ஆரம்பிக்கப்பட்டது.
'மாநிலம் முழுக்க, ஐந்து வகுப்புகளே நடந்துள்ளன. இனி மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு கவனம் செலுத்துவர். நீட் வகுப்பிற்கு வருகைப்பதிவு குறையும்.
'பொதுத்தேர்வுக்குப் பின், போதிய அவகாசம் இருக்காது. இதனால், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறுகிய காலத்தில், மாணவர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சி வழங்குவது என்பது குறித்து, பாடத்திட்ட குழு ஆய்வு செய்ய வேண்டும். மாதிரி தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரித்தல், சிலபஸ் முடிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட வேண்டும்' என்றனர்.