சென்னை, : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பெண் விஞ்ஞானி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரியான அவரது கணவருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வருபவர் விஜயகுமாரி, 57; சென்னை தரமணியில் உள்ள, 'சமீர்' எனப்படும் மத்திய அரசின் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானி.
இவரது கணவர் தேவராஜ், 65, திருவண்ணாமலையில் குடிநீர் வாரியத்தில், நிர்வாக பொறியாளராக பணிபுரிந்தார். இவர்கள் இருவரும், 2004 முதல், 2011 வரையிலான காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, 2011ல் சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். விஜயகுமாரியின் சகோதரரும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
![]()
|
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
தம்பதியர் இருவரும், தங்கள் பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக, 89.22 லட்சம் ரூபாய்; அதாவது, 141.90 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார். இருவரும் இணைந்தே, அசையும், அசையா சொத்துகளை சேர்த்துள்ளனர்.
இருவரும் மதிப்புக்குரிய பதவியை வகித்து வந்துள்ளனர்.
இத்தகைய பதவியை பயன்படுத்தி, சொத்து குவிப்பு குற்றத்தைப் புரிந்துள்ளனர். எனவே, இருவருக்கு குறைவான தண்டனை வழங்க முடியாது.
'வருமான வரிக் கணக்கில் காட்டப்படும் வருமானத்தை, வருமான சான்றாகக் கருத முடியாது; அது, வரியைக் கணக்கிடும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது' என, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.
எனவே, தம்பதியர் இருவருக்கும், தலா நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவ்வழக்கில், விஜயகுமாரியின் சகோதரர் விடுவிக்கப்படுகிறார். சட்டத்துக்கு உட்பட்டு, வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை கையகப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.