மத்திய பிரதேசத்தில் ரேவா மாவட்டத்தின் கைலாசபுரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரது வீட்டிற்கு அருகே பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவன் மீது சந்தேகமடைந்து அவனைப் பிடித்து விசாரித்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: சிறுவன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பக்கத்து வீட்டில் வசித்த இந்த பெண்ணின் வீட்டுக்கு, 'டிவி' பார்க்கச் சென்றான். அப்போது அந்த பெண்ணின் மொபைல் போனை திருடியதாக, சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை அவமானப்படுத்திய குடும்பத்தினரைப் பழிவாங்க எண்ணிய சிறுவன், சமீபத்தில் தனிமையில் இருந்த அந்த பெண்ணை தாக்கி, அருகில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடத்திற்கு இழுத்துச் சென்றான்.
அங்கு அந்த பெண்சத்தம் போட முடியாத அளவிற்கு, அவரது வாயில் துணியைத் திணித்ததுடன், அவரது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடியுள்ளான். மேலும் அவரது கை, கால்களை கட்டி வைத்து பலமாக தாக்கியுள்ளான். மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்துஉள்ளான். பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்கிஉள்ளான். மேலும் ஆத்திரம் தீராத அச்சிறுவன், அந்த பெண்ணை அரிவாளால் உடலின் பல பகுதிகளில் வெட்டி உள்ளான். இதில் அந்த பெண் இறந்தார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட சிறுவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மகள்களை கொல்ல முயன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் அந்தோணிராஜ் 42, மஞ்சள் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி. கணவன் மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்தது. நேற்று மூத்த மகள் மோனிகா வெளியே சென்ற தந்தையை பார்க்க வேண்டும் என தாயாரிடம் தெரிவித்தார். ஆத்திரமுற்ற ஜான்சிராணி மோனிகாவை பலமாக தாக்கினார். இதில் ரத்த காயமுற்றவரை வீட்டில் பூட்டி விட்டு ரித்திகா மேரியுடன் தற்கொலை செய்ய ரயில்வே பாலம் சென்றார்.
நீண்ட நேரம் காத்திருந்தும் ரயில் வராததால் ரித்திகா மேரியையும் கொல்ல முயன்றார். ஆனால் அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் கிழக்கு போலீசுக்கு தெரிவித்தனர். போலீஸ், தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரித்திகா மேரி தந்த தகவலின்படி மோனிகாவையும் மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலியல் அத்துமீறலுக்கு உடந்தை; தாளாளர் மனைவி, ஹெச்.எம்., கைது
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவியர் மூன்று பேரிடம் பள்ளி தாளாளர் குத்புன் நஜீப், 45, பாலியல் ரீதியாக தவறான தொடுதலில் ஈடுபட்டார். இது குறித்து, மாணவியர் புகார் அளித்தும், பள்ளி தலைமையாசிரியை காதரம்மாள், 58, நடவடிக்கை எடுக்கவில்லை.
முஸ்லிம் பெண்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, மேலப்பாளையம் போலீசார், பள்ளி தாளாளர் குத்புன் நஜீபை இரவில் கைது செய்தனர்.
மேலும், மாணவியர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மறைத்த பள்ளி தலைமை ஆசிரியை காதரம்மாள், 'இது குறித்து வெளியே கூறக்கூடாது' என, மாணவியரிடம் கூறி மறைக்க முயன்ற தாளாளரின் மனைவி முகமது பாத்திமா, 40, ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சிறுமியை 2வது திருமணம் செய்த வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, நல்லகானகொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் சுரேஷ், 28; கட்டட தொழிலாளி. இவரது மனைவி, கர்நாடகா மாநிலம், மாலுாரைச் சேர்ந்த லலிதா, 23. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறால் மூன்றாண்டாக கணவரை பிரிந்து, லலிதா கர்நாடகாவில் தனியாக வசிக்கிறார்.
இந்நிலையில், சூளகிரியைச் சேர்ந்த பெண்ணை, நான்கு மாதங்களுக்கு முன் சுரேஷ் இரண்டாவது திருமணம் செய்தார். இதையறிந்த லலிதா, ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சுரேஷிடம் விசாரித்த போது, அவர் இரண்டாவதாக திருமணம் செய்தது, 16 வயது சிறுமி என்பது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார், அவரிடம் புகார் பெற்று, போக்சோ சட்டத்தில் சுரேஷை நேற்று கைது செய்து, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
மனைவியுடன் பழகியவரை வெட்டியவர் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தைச் சேர்ந்தவர் செந்தில், 42; வெளிநாட்டில் பணிபுரிந்தார். மனைவி, குழந்தைகள் கூடங்குளத்தில் வசித்தனர். இவர்களது வீட்டுக்கு அருகில் வசித்தவர் கிருபாகரன், 42; செந்திலின் நண்பர்; திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். செந்தில் வெளிநாட்டில் பணிபுரிந்த போது, அவரது குடும்பத்திற்கு கிருபாகரன் உதவி செய்து வந்தார். அப்போது அவர், செந்தில் மனைவியுடன் தவறாக பழகியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த செந்தில், மனைவியை கண்டித்தார். இதனால் கோபமுற்ற மனைவி, இரண்டு ஆண்டு களுக்கு முன், குழந்தைகளுடன் கன்னியாகுமரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில், நேற்று முன்தினம் கிருபாகரனை அரிவாளால் வெட்டினார். பலத்த காயமடைந்த கிருபாகரன், நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில், கூடங்குளத்தில் உள்ள தோட்டத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போதையில் மனைவியை தாக்கிய 'மாஜி' கிரிக்கெட் வீரர் மீது வழக்கு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, தன் மனைவி ஆண்ட்ரியாவை, தகாத வார்த்தையால் திட்டியும், அடித்தும் துன்புறுத்தியுள்ளார். இதைப் பார்த்த அவரது மகன், சமரசம் செய்ய முயற்சித்துள்ளார். இதை பொருட்படுத்தாமல், வீட்டில் உள்ள சமையல் பாத்திரத்தை மனைவியின் மீது வீசி காம்ப்ளி தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ஆண்ட்ரியா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின், தன் கணவர் காம்ப்ளி மீது போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வினோத் காம்ப்ளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாக்.,கில் மீண்டும் குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் குவெட்டா நகரில், போலீஸ் குடியிருப்புப் பகுதியில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், போலீசார் உட்பட ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு அருகில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கண்காட்சி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தனர். குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும், போட்டி நிறுத்தப்பட்டு, கேப்டன் பாபர் அசம் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.