திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டத்தில், நெல் அறுவடைக்காக ஆந்திரா, கர்நாடகா மற்றும் சேலம் பகுதியில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் 75 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கிய பிரதானமாக உள்ளது.
மாவட்டத்தில் 3 லட்சம் எக்டேருக்கு மேல் நெல், கரும்பு மற்றும் பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த பயிர் பரப்பில், 50 சதவீதத்திற்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக சொர்ணவாரி, சம்பா, நவரை என 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர், அக்டோம்பர் மாதத்தில், சம்பா நடவுப்பணி நடந்தது.
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானுார், ஒலக்கூர், மயிலம், செஞ்சி, விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், நெல் நடவு செய்திருந்தனர்.
வழக்கமாக சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பொன்னி நெல் நன்கு விளைந்து பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு அறுவை செய்வது வழக்கம்.
கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக தண்ணீர் பஞ்சமின்றி, பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள், செழிப்பாக வளர்ந்து, அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது.
கடந்த காலங்களில், ஆட்களை வைத்து, நெல் அறுவடை செய்து வந்தனர். இதனால் கூலி அதிகரித்ததோடு, ஆட்களும் கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது.
ஆட்களின் கூலியை மிஞ்சப்படுத்தவும், விரைந்து நெல் அறுவடை செய்யவும், நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் தருணங்களில் இயந்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்த வரை பெரும்பாலான விவசாயிகள், சொந்தமாக நெல் அறுவடை இயந்திரங்கள் வைத்திருப்பதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலத்தில் இருந்து தான் நெல் அறுவடை இயந்திரம் வரவழைக்கப்படுகிறது.
இந்தாண்டு சம்பா சாகுபடிப்பணி துவங்கி விட்டதால், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், தமிழக பகுதியான சேலம் பகுதிகளில் இருந்தும், அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்படுகிறது.
தற்போது சம்பா சாகுபடி செய்வதற்காக நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெளி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நெல் அறுவடை இயந்திரங்களை அதிகளவில் விவசாயிகள் வாடகைக்கு கொண்டு வரத் துவங்கியுள்ளனர்.