வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, கூட்டணி ஓட்டு வங்கிக்கு வலு சேர்க்கும் என்று நான் கருதவில்லை. அதே நேரம், பா.ஜ.,வுக்கு எதிரான அணியில் அவர் சேர்ந்திருப்பதை வரவேற்கிறேன்.

'வி.சி., வேண்டுமா; கமல் வேண்டுமா' என்ற கேள்வி எழுந்தால், தி.மு.க.,வுக்கு வி.சி., முக்கியமில்லை என்பது தான், இப்ப, பதிலா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு:
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால், 7.50 லட்சம் பேருக்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
இது, வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட விஷயமாச்சே... இவரு, புள்ளிவிபரம் கொடுக்கறத பார்த்தா, அந்த துறை மீதும் ஒரு கண் வச்சிருக்காரோ!
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர் பேட்டி:
தேர்தல் சமயத்தில் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தியே கூட்டணி உடன்பாடு செய்யப்படுகிறது. அதன் பின், மக்களுக்கான கோரிக்கை நிறைவேற்றப்படாத போது, அரசுக்கு அதை சுட்டிக்காட்டுவதும், விமர்சிப்பதும் ஜனநாயக கடமை.
ஆளுங்கட்சி மனம் நோகாதபடி நடந்துக்கற, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, இவரை வச்சி தான், 'டியூஷன்' எடுக்கணும் போல!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
பா.ம.க.,வைச் சேர்ந்தவர்கள், ரயில்வே இணை அமைச்சர்களாக இருந்த போது தான், தமிழகத்திற்கு அதிகமான ரயில் திட்டங்கள் கிடைத்தன. அதன் பின், 14 ஆண்டுகளாக ரயில் பாதை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின்தங்கிஉள்ளது. எனவே, தமிழகத்தில் நிலுவையில் உள்ள, ஒன்பது புதிய ரயில் பாதை திட்டங்களுக்கும், மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி, விரைந்து முடிக்க வேண்டும்.

அப்ப, 14 ஆண்டுகளா, பா.ம.க.,வோட கூட்டணி, 'பிளான்' சரியா, 'ஒர்க் அவுட்' ஆகலைன்னு சொல்ல வர்றாரா?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேச்சு:
கொரோனா காலத்தில், 2021 - 2022ம் ஆண்டில், மத்திய, பா.ஜ., அரசு கொரோனா தடுப்பூசியை, இலவசமாக வழங்கியது. இதற்காக, 35 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு செலவிட்டது. இதன் வழியே, மக்களை காப்பாற்றியது. ஆனால், தமிழக அரசு மக்களிடம் இருந்து, 36 ஆயிரம் கோடி ரூபாயை, சாராயம் விற்று வாங்கி உள்ளது. இது தான், இரண்டு அரசுகளுக்கும் உள்ள வித்தியாசம். பா.ஜ., அரசு குடி காத்தது; தி.மு.க., அரசு குடி கெடுக்கிறது.

நீங்க உண்மையை சொன்னாலும், 'பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எங்கும் மது விற்பனை நடக்கலையா'ன்னு, தி.மு.க.,வினர் கேட்பாங்களே... அதுக்கு பதில் உண்டா?