புதுடில்லி: அதானி குழுமம் மீது விசாரணை நடத்தக்கோரி பார்லிமென்ட் வளாகத்தில் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 2 நாட்களாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.,06) 3ம் நாள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
இந்த நிலையில், அதானி குழுமம் மீது பார்லி., கூட்டுக்குழு விசாரணை அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரி பார்லி., வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்லிமென்ட் ஒத்திவைப்பு
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பார்லி., கூட்டத்தொடரின்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.