தஞ்சாவூர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பில், வருவாய்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, ஊரணிபுரத்தில் கையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் பெய்த தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி நெற்கதிர்கள் மற்றும் மானாவாரி பயிர்கள் சேதம் அடைந்து விட்டது.
இதன் பாதிப்பு குறித்து வருவாய்துறை அதிகாரிகளுக்கு பல முறை தகவல்கள் தெரிவித்தும், கணக்கெடுப்பு பணிகளை செய்யாமல் விவசாயிகளை அலட்சிய படுத்தி வரும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வருவாய்துறை அதிகாரிகளை கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக, அரசு நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதமும் பேரிடர் நிவாரணம் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும்.
காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் உரிய பயிர் இழப்பீட்டு தொகையை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருவோணம் வட்டார விவசாயிகள் ஊரணிபுரம் கடைத்தெரு பகுதியில் அழுகிய பயிர்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement