வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சர்ச்சைகளுக்கு இடையே சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் மொத்தம் 5 பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்காக 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கவுரியை, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் 21 பேர் ஜனாதிபதிக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கும் கடிதம் அனுப்பியிருந்தனர். அதே நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம் உள்ளிட்ட 56 வழக்கறிஞர்கள், விக்டோரியா கவுரியை நீதிபதியாக்க வலியுறுத்தி கடிதம் எழுதினர்.

இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு இடையே விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவருடன் பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி என மொத்தம் 5 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐந்து நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.