பலரும் தற்போது தங்களுக்குச் சொந்தமான சிறிய இடத்தில், கனவுத் தோட்டம் அமைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் முதலில் செய்வது, அதிக விலை கொடுத்து தொட்டிகளை வாங்குவது, சிறிய இடத்திற்குள் அதிக செடிகளை வைப்பது, அதிகளவில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது என தமது எண்ணத்தில் என்னென்ன தோன்றுகிறதோ?, அதையெல்லாம் செய்து விடுகிறார்கள்.
இறுதியில் அவையனைத்தும் பலன் கொடுக்கிறதா என்றால், கேள்விக்குறிதான்.
இதற்கு மாற்று வழியாக தற்சார்பு முறையைப் பயன்படுத்தி தோட்டம் அமைத்தால், செலவுகளும் குறைவு. அதேபோல் பலன்களும் அதிகரிக்கும். அதற்கு நாம் பின்வரும் வழிமுறைகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சரியான பருவகாலத்தில் நாம் விதைக்கும் போது, எந்தவித பூச்சித் தாக்குதலும் இருக்காது.
தோட்டத்தில் செடிகள் அல்லது பயிரைக் கலந்து நட வேண்டும். ஒரு செடியை மற்றொரு செடி சார்ந்து வளர்ந்தால் தான் தேவையான சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக ஒரு பாத்தி அளவு எடுத்துக்கொண்டால் அதில், ஒரு பழமரம், காய் செடி, கிழங்கு செடி, கீரை வகைகள், மூலிகைச்செடி, பூச்செடி ஆகியவை இடம்பெற்றால் சிறப்பு.
இப்படிக் கலப்பு பயிர்களை நடும்போது, அந்தந்த செடிகளுக்குத் தேவையான சத்துகளைப் பகிர்ந்து எடுத்துக்கொள்வதால், செடிகள் ஆரோக்கியமாக வளர்வதோடு மட்டுமல்லாமல், மண்வளமும் அதிகரிக்கும்.
ஒரு பருவகாலம் முடிந்த பிறகு அந்த இடத்தில் பயிர் சுழற்சி முறையைக் கையாளுவதை மறந்து விடக்கூடாது. பயிற்சி சுழற்சி முறை என்பது, ஒரு முறை வெண்டை நட்ட இடத்தில் மீண்டும், வெண்டை நடக் கூடாது. மாறாக அந்த இடத்தில் கிழங்கு செடியை நட வேண்டும். இந்த முறை மூலம் பூச்சித் தாக்குதலை இயற்கை முறையிலே கட்டுப்படுத்தலாம். இதற்காக நாம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
சூரிய ஒளியை நாம் செடிகளுக்குப் பகிர்ந்து அளிப்பதன் மூலம் அதிக விளைச்சல் பெற முடியும். இதற்குச் செடி மற்றும் மரங்களின் உயரத்தை அறிந்து ஒன்றுடன் ஒன்று சார்ந்து இருப்பது போல் நட வேண்டும். எடுத்துக்காட்டாக பப்பாளி மரத்திற்கு அடியில் மிளகாய் செடி, அதற்கு அடியில் கீரை வகைகள் என நடவு செய்யும் போது, அவைகளின் வளர்ச்சியும் சரியான விகிதத்தில் இருக்கும்.
இவையனைத்தும் கருத்தில் கொண்டு தற்சார்பு தோட்டத்தை அமைத்தால், தோட்டம் ஆரோக்கியமாக இருப்பதுடன், செலவினங்களைக் குறைத்து இயற்கை முறையில் விளைவித்த சத்தான காய்கறி, பழங்களை பெறலாம்.
பலரும் தற்போது தங்களுக்குச் சொந்தமான சிறிய இடத்தில், கனவுத் தோட்டம் அமைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் முதலில் செய்வது, அதிக விலை கொடுத்து தொட்டிகளை வாங்குவது,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement