வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரான செந்தில்முருகன் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாகக் கூறி, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் இபிஎஸ் தரப்புக்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் குழப்பம் குறைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தென்னரசு என்பவரை வேட்பாளராக அறிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செந்தில்முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தனர்.
இந்த இருவரில் யாருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது என்ற குழப்பம் நீடித்தது. இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இபிஎஸ் தரப்பு வேட்பாளர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், செந்தில்முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இரு தரப்பும் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதால் தாங்கள் வாபஸ் பெறுகிறோம் எனவும் ஓபிஎஸ் தரப்பினர் விளக்கம் அளித்தனர். மேலும், இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிப்பெறுவதற்காக பிரசாரம் செய்வோம் எனவும் அறிவித்துள்ளனர்.