வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் சமீபகாலமாக பாலம், ரயில் இன்ஜின் உள்ளிட்டவைகளை திருடர்கள் திருடியதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது 2 கி.மீ அளவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருட்டுப்போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு சம்பவம் பலவற்றில் வித்தியாச வித்தியாசமான பாணியை கொள்ளையர்கள் கையாள்வது வழக்கம். ரயிலில் கூட பயணிப்போல நடித்து திருடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பீஹாரில் இப்படியெல்லாமா திருடுவாங்க என யாரும் கற்பனைக்கூட செய்ய முடியாத திருட்டுகள் நடக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, ரயில்வே இரும்பு பாலம், ரயில் இன்ஜின், செல்போன் டவர் என பலவற்றை திருட்டு கும்பல் திருடிய சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அந்த வகையில், தற்போது சுமார் 2 கி.மீ தொலைவிற்கு ரயில் தண்டவாளங்களையும் திருடி விற்றுள்ளது ஒரு கும்பல்.

பீஹாரில் உள்ள சமஸ்டிபூர் ரயில்வே கோட்டத்தில் பந்தவூல் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து லோஹாத் என்ற சர்க்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது. இந்த சர்க்கரை ஆலை சில ஆண்டுகளாக இயங்கவில்லை. எனவே, இந்த ரயில் பாதையில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், சுமார் இரண்டு கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. இதனையடுத்து இரு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.