வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக.,வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரான தென்னரசுவிற்கு 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும், அது பற்றிய தகவல்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இன்று (பிப்.,6) தேர்தல் ஆணையத்தில் நேரில் சமர்பித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்றிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சண்முகம் கூறியதாவது: மொத்தம் 2646 பொதுக்குழு உறுப்பினர்கள் ஓட்டளிக்க தகுதிப்பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி வேட்பாளர் குறித்து சுற்றறிக்கை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், தென்னரசு என்பவரை வேட்பாளராக ஏற்றுக்கொள்வது அல்லது வேறு ஒருவரை பரிந்துரைக்கலாம் எனக் கேட்கப்பட்டது. இதற்கு 90 சதவீதம் பேர் அதாவது, 2501 ஓட்டுகள் தென்னரசுவை அதிமுக.,வின் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். தென்னரசுவை வேட்பாளராக்க ஒருத்தரும் மறுப்பு தெரிவிக்கவில்லை;145 ஓட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.

எனவே அதிமுக.,வின் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக தென்னரசு தான் என்பதை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளார். நாளையுடன் (பிப்.,7) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு நிறைவுப்பெறுவதால் அதற்குள்ளாகவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரான செந்தில்முருகன், தான் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் எனக்கூறி தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.வி.சண்முகம், ‛ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்ற கதையெல்லாம் சொல்வார்கள். அதுபற்றியெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை' எனக் கூறினார்.