வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ஈரானில் நடந்த பெண்களுக்கான பாட்மின்டன் போட்டியில், பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையை, 'ஹிஜாப்' அணியக்கோரி கட்டாயப்படுத்தியது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஈரான் தலைநர் டெஹ்ரானில்,மகளிர் பாட்மின்டன் போட்டிகளுக்கான இறுதிப்போட்டி, நேற்று (பிப்.,5) நடைபெற்றது. இதில், 19 வயதான இந்தியாவின் தன்யா ஹேமந்த் வெற்றி பெற்று, தங்க பதக்கம் வென்றார். இதனைத்தொடர்ந்து அவர் பதக்கம் பெறுகையில் ஹிஜாப் அணிந்தவாறு பதக்கம் பெற்ற புகைப்படம் வைரலானது. பதக்கம் பெறும் முன், அவரை, 'ஹிஜாப்' அணியக்கோரி போட்டியின் ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

போட்டிக்கான விதிமுறைகளில் ஹிஜாப் அணிவது குறித்து, குறிப்பிடாததால் தன்யா ஹேமந்த் தரப்பில் இருந்து அது பற்றி, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'ஈரானுக்குள் நுழையும்போதே, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டுமென்பது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், விளையாட்டின்போது அது பற்றி, நாங்கள் குறிப்பிடவில்லை,' என, போட்டி ஏற்பட்டாளர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில், வீராங்கனைகள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், மைதானத்துக்குள் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' என்ற, வாசகமும் ஒட்டப்பட்டு, வீராங்கனைகளுடன் சென்ற, ஆண் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களும் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டனர்.