அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறைக்கு பங்களிப்பு செய்தவர்கள் மறையும் போது, அவர்கள் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.
ஆரம்பத்தில் முன்னாள், இந்நாள் ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், கேபினட் அமைச்சர்கள் மறைவுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும். பின்னர் யாருக்கு அரசு முழு மரியாதை வழங்கலாம் என்பதை மாநில அரசே முடிவு செய்யும் வகையில் விதிகள் மாற்றப்பட்டன. அதன்படி தற்போது முதல்வர் கேபினட் அமைச்சர்களுடன் கூடி விவாதித்து, முடிவு எடுப்பர்.
அரசு முழு மரியாதை என்பது, அந்நபர் இறந்த நாள் மாநிலத் துக்க தினமாக அனுசரிக்கப்படும். அவர்களது உடலுக்கு மாநில காவல் துறை சார்பில் இறுதி வணக்கம் செய்யப்பட்டு, குண்டுகள் முழங்க வழி அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், கலைத்துறையினர் ஆகியோர் மறைவுக்கு இந்த மரியாதை வழங்கப்படுகிறது. சமீபத்தில் மறைந்த பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கும் இவ்வாறு அரசு முழு மரியாதை செய்தது. இந்தியாவில் முதன் முதலில் மகாத்மா காந்தி மறைவுக்கு தான் அரசு முழு மரியாதை வழங்கப்பட்டது.
குண்டுகள் முழங்குவது ஏன்?
![]()
|
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலும் இந்த குண்டுகள் முழங்க மரியாதை என்பது கடைபிடிக்கப்பட்டது. அப்போது மறைந்தவர் அரசர் எனில் 101 குண்டுகள் சுடப்பட்டன. பின்னர் இன்று உலகளவில் 21 குண்டுகள் என்பது பொதுவாகிவிட்டது. 52 விநாடிகளில் இந்த 21 குண்டுகள் முழங்கும். சுடப்பட்ட குண்டுகளை அங்கேயே விட்டுச் செல்லமாட்டார்கள். அதனை சேகரித்து அதிகாரிகளிடம் வழங்குவர். முப்படைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் மறைவுக்கு 17 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி நடக்கும். சமீபத்தில் மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு 17 குண்டுகள் முழங்க மரியாதைச் செய்தது குறிப்பிடத்தக்கது.