கோவை: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்தாண்டு, அக்., 23 ம் தேதி நடந்த, கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின்,29, பலியானார். தனிப்படை விசாரணையில், தீபாவளியை முன்னிட்டு, கோவையில் பல்வேறு இடங்களில் சதி செயல்களில் ஈடுபட ஜமேஷா முபின் உள்பட பலர் திட்டமிட்டது அம்பலமானது. முபின் கூட்டாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஏழு பேரை, சென்னை பூந்தமல்லி கோர்டில் கஸ்டடி எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்து இன்று விசாரித்தனர்.
கார் குண்டுவெடிப்பில் பலியான முபின் குறித்து, அவரது மனைவி நஷ்ரத்திடம்,25, வாக்குமூலம் பெறுவதற்காக, கோவை ஜே.எம்:4, கோர்ட்டிற்கு இன்று மாலை என்.ஐ.ஏ., அதிகாரிகள் அழைத்து சென்றனர். மாஜிஸ்திரேட் சரவணபாபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பூட்டப்பட்ட அறைக்குள் அவரிடம் , சுமார் 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.