''ஐ.ஏ.எஸ்., ஆபீசர்கள்னா ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயமான்னு அரசு அலுவலர்கள் போர்க்கொடி துாக்குறா வே...'' என்றபடியே, இஞ்சி டீயை குடித்தார் அண்ணாச்சி.
''என்ன பஞ்சாயத்து ஓய்...'' எனக்கேட்டார் குப்பண்ணா.
''பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ரெண்டு பேர், 'எங்கள் பிள்ளைகள் பிளஸ் 2 தேர்வு எழுதப் போறாவ, அதுவரை கூட இருந்து கவனிக்கணும்'னு சொல்லி, ரெண்டு மாசம் விடுப்பு எடுத்துட்டு போயிட்டாவ...
''இதே காரணத்துக்காக, ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரிகளோ, அலுவலர்களோ, 'லீவு' கேட்டா கிடைக்காதாம்... 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்னா ஒரு சலுகை, மத்தவங்களுக்கு அது கிடையாதா'ன்னு அரசு அலுவலர்கள் வெளிப்படையாவே கொதிக்க தொடங்கிட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''திருப்பூர்ல, 'டுபாக்கூர்' பத்திரிகையாளர்கள் அட்டூழியம் அதிகரிச்சிடுச்சு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''வட மாநிலங்களை சேர்ந்த பலர், திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்திட்டு வர்றாங்க... இவங்க கம்பெனிகளுக்கு, 'டுபாக்கூர்' பத்திரிகையாளர்கள் சிலர் குரூப்பா போய், குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வச்சிருக்குறதா சொல்லி மிரட்டி, பணத்தை கறக்குறாங்க பா...
''அங்க மட்டுமில்லாம, 'போலீஸ், வருவாய் துறை, வட்டார போக்குவரத்து துறை, பத்திரப்பதிவு'ன்னு ஒரு துறை விடாம எல்லாத்திலும்புகுந்து, இந்த, 'டுபாக்கூர்ஸ்' பணம் பறிக்குறாங்க... இந்த குரூப்பை பற்றி தெரிஞ்சும், அதிகாரிகள் கமுக்கமா இருக்குறாங்க பா...
''சமீபத்துல ஒரு பனியன் நிறுவனத்தில், 'சைல்ட் லேபர்' வச்சிருக்குறதா சொல்லி மிரட்டி, 1 லட்சம் ரூபாய் கறந்துட்டாங்க...
''இதுல கொடுமை என்னன்னா, குழந்தை தொழிலாளர் விவகாரம் பற்றி, 'சைல்ட் லைன்' அமைப்பினருக்கு நல்லா தெரிஞ்சும் கண்டும் காணாமல் இருக்குறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''டாஸ்மாக் கடையிலயே வசூலை போடுறாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.
''அரசாங்கத்து கிட்டயே, 'கட்டிங்' போடறாளா... இது புதுசா இருக்கே ஓய்...'' எனக்கேட்டார் குப்பண்ணா.
''கோவை மாவட்டத்துல, 300க்கும் அதிகமான டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்குதுங்க... இங்க ஒரு நாளைக்கு, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமா விற்பனை நடக்குது... இங்குள்ள, 250க்கும் அதிகமான பார்களில் மூன்றில் ஒரு பங்கு பார்கள், அரசுக்கு எந்தவித குத்தகை தொகையும் கொடுக்காம, சட்டவிரோதமா நடக்குதுங்க...
''அனுமதி பெற்ற பார்களில், குத்தகை தொகைக்கு இணையான தொகையையும், அனுமதி பெறாத பார்களில், கடைசியா செலுத்துன குத்தகை தொகையில் ஒன்றரை மடங்கு தொகையும், 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் வசூலிக்கப்படுதுங்க...
''இது போதாதுன்னு, போன நவம்பரில் இருந்து, '300 டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும், தலா 2 ரூபாய் கமிஷன் வெட்டணும்'னு, துறை அமைச்சரின் பெயரை சொல்லி மிரட்டி, கரூரைச் சேர்ந்த ஒரு குரூப் வசூலை போடுறாங்க...
''ஒவ்வொரு கடையிலும் எத்தனை பாட்டில்கள் விற்பனையாச்சு என்கிற விபரத்தை, டாஸ்மாக் அதிகாரிகள் சிலரே இந்த குரூப்புக்கு கொடுக்குறாங்க... அதன் அடிப்படையில, 10 நாளுக்கு ஒரு தடவை பணம் வசூலிக்கப்படுதுங்க...
''இதை எதிர்த்து கேள்வி கேட்ட, டாஸ்மாக் யூனியன் நிர்வாகிகள் பலரும் கூண்டோட மாற்றப்பட்டாங்க... இந்த அராஜகத்தை எதிர்த்து, தி.மு.க., - அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி யூனியன்கள் சேர்ந்து, கோவையில் விரைவில் போராட்டம் நடத்த தயாராகிட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.