திருப்பூர்:அவிநாசியில் இயங்கும், சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சி.எஸ்.இ.டி.,) சார்பில், வளரிளம் பெண்களின் தொடர்கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்ட கலைப்பயணம், 6 முதல், 12ம் தேதி வரை நடக்கிறது.
இதன் துவக்க விழா, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ரத்தினம் வரவேற்றார். சி.எஸ்.இ.டி., மைய செயல் இயக்குனர் நம்பி பேசினார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) நித்யா பேசுகையில், ''பெண்களுக்கான பாதுகாப்பை கல்வி உறுதி செய்கிறது. தவறு செய்வோரை தட்டிக் கேட்க கல்வியே உதவுகிறது. பெண்கள் தங்களுக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம், 1098 என்ற எண்ணை மறந்து விடக்கூடாது,'' என்றார்.
துணை மேயர் பாலசுப்ரமணியம் பொம்மலாட்ட நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சென்னை, கலை அறப்பேரவை கலைவாணன் குழுவை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று, 'பள்ளி மாணவியர் கல்வியை தொடர்வது, பணிக்கு செல்ல பெற்றோரால் வற்புறுத்தப்படும் பெண்களை மீட்டெடுப்பது,' உள்ளிட்டவை குறித்து பொம்மைகள் மூலம் பொம்மலாட்டம் நடத்தி, மாணவியரின் கைதட்டல்களை பெற்றனர்.
குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி ஒருங்கிணைத்தார். உதவி தலைமை ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.நேற்று அனுப்பர்பாளையம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளிகளுக்கு சென்ற கலைப்பயண குழு, இன்று இடுவம்பாளையம், அங்கேரிபாளையம், சிறுபூலுவப்பட்டி பள்ளிகளுக்கு செல்கிறது.
Advertisement