திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர் சம்பவங்களில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
திருநெல்வேலி, குலவணிகர்புரம் பி.பி.சி., காலனியில் வசிப்பவர் செல்லதுரை. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்; தற்போது வக்கீலாக உள்ளார். இரு நாட்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார்.
மாடி வழியே வீட்டினுள் புகுந்த கொள்ளையர் பீரோவில் இருந்த, 67 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.10 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர்.
ரெட்டியார்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மகராஜன் வீட்டிலும் பூட்டை உடைத்து, 2,000 ரூபாயை திருடிச் சென்றனர். இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடர் கொள்ளைகள்
தொடர்ந்து இரு நாட்களுக்கும் மேலாக பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர், மாடி வழியே புகுந்து கொள்ளையடிக்கின்றனர்.
ஜன., 15ல் பெருமாள்புரம் கனரா பாங்க் காலனியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தேவி வீட்டின் மாடி வழியே புகுந்து 100 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.அதே பகுதியில் பல்கலை பேராசிரியர் அருட்செல்வன் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்தது. இந்த சம்பவங்களிலும் இன்னும் துப்பு துலக்கவில்லை.