திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் கீழடியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழிகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
கீழடி அரசு பள்ளி அருகே உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியக கட்டட பணிகள் நிறைவு பெற்று பொருட்களை காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் எடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் கொந்தகை தளம் பண்டைய காலத்தில் ஈமக்காடாக இருந்தது தெரியவருகிறது.
கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட 52 தாழிகள் உட்பட மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் ஒரு அடி உயரம் உட்பட அதிகபட்சமாக ஆறு அடி உயரம் கொண்ட தாழிகள் வரை உள்ளன. தாழிகளுக்குள் சூதுபவளம், இரும்பு ஆயுதம், நெல் மணிகள், சுடுமண் கிண்ணங்கள், மேற்கத்திய பாணி கிண்ணங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் உள்ளன.
அருங்காட்சியகத்தில் மண்பாண்ட பொருட்களுக்கு என தனி கட்டட தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் முதுமக்கள் தாழிகளை தனியாக காட்சிப்படுத்த தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக 4 வித அளவுகளில் தாழிகள் காட்சிப்படுத்த இடவசதியை பொறுத்து அனைத்து தாழிகளையும் வைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் பண்டைய காலத்தில் பராமரிக்க முடியாத முதியோர்களை உயிருடன் அப்படியே புதைப்பது, இறந்தவர்களின் உடல்களை புதைப்பது, வேறு இடத்தில் இறந்தவர்களின் எலும்புகளை எடுத்து வந்து அவர்கள் விரும்பிய பொருட்களுடன் புதைப்பது உள்ளிட்ட மூன்று வகையான தாழிகள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.