ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கேரளாவிற்கு லாரியில் ரூ.3 கோடி மதிப்புள்ள 1200 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான வியாபாரி கிருஷ்ணகாந்த் பல்லாவ்வை 52, தனிப்படை போலீசார் ஒடிசாவில் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி செக்போஸ்டில் லாரியில் கடத்தப்பட்ட 1200 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் ஜன.,16 பறிமுதல் செய்தனர். லாரியிலிருந்த ராமநாதபுரம் மாவட்டம் அய்யன்தோப்பு அபூபக்கர் சித்திக் 35, கமுதி தாலுகா எழுவனூர் செல்வராஜ் 32, சின்னச்சாமி 25, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் லாரியில் ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 1200 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர்.
பின் அவற்றை தேனி வழியாக கேரளா கடத்த இருந்தனர். மீன் கூடைகளில் இருந்த கஞ்சா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளியான ஒடிசா வியாபாரி கிருஷ்ணகாந்த் பல்லாவ்வை போலீசார் கைது செய்து நேற்று ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே கூறியதாவது: கிருஷ்ணகாந்த் பல்லாவ் ஒடிசா மாநிலம் மல்கன் கிரி மாவட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., கதிரேசன் கொண்ட தனிப்படையினர் சென்று அம்மாநில போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்தனர். இவர் 15 ஆண்டுக்கு மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தேங்காய், காய்கறிகள், கருவாடு, மிளகாய் வத்தல் ஏற்றி செல்லும் லாரிகளில் கஞ்சா மூட்டைகளை கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார்.