அ.தி.மு.க.,வில் வேட்பாளர் பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், யார் பட்டியலை, தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைத் தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ள, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அளிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 40 பேர்; அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகள், 20 பேர் பெயரை பரிந்துரைக்கலாம். தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்கும் நட்சத்திர பேச்சாளர்களின் போக்குவரத்து, பிரசார செலவுகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சமர்ப்பிக்கப்படாது.
அரசியல் கட்சிகள் அளித்த, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் சீமான் உட்பட, 20 பேர்; தே.மு.தி.க., சார்பில், பிரேமலதா, அவரது சகோதரர் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் உட்பட, 40 பேர் கொண்ட பட்டியல் அளிக்கப்பட்டு உள்ளது.
இ.கம்யூ., சார்பில், 40; அ.ம.மு.க., சார்பில், 18; புரட்சி பாரதம் சார்பில், 5; அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில், 13; தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், 20; த.மா.கா., சார்பில், 20; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், 20 பேர் பட்டியல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆளும் கட்சியான தி.மு.க., சார்பில், 40 பேர் பட்டியல் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமைச்சர்களில் பொன்முடி, தியாகராஜன், ராமச்சந்திரன், மனோதங்கராஜ் ஆகியோர் பெயர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வில், பழனிசாமி தரப்பில், 40 பேர்; பன்னீர்செல்வம் தரப்பில், 40 பேர் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது.
இதில், யாருடைய பட்டியலுக்கு ஒப்புதல் வழங்குவது என தெரியாததால், இருவர் வழங்கிய பட்டியலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி உள்ளார்.
இருவரது பட்டியலில், எந்த பட்டியலை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வேட்பாளர் பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் தரப்பினரும் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வோம் என, அறிவித்துள்ளனர்.- நமது நிருபர் -
***