சேலம், முள்ளக்காட்டைச் சேர்ந்தவர் குணசீலன், 26. மதுரை, தாசில்தார் நகரில் இரு சகோதரர்களுடன் தங்கி, ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை செய்தார். நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது: அம்மா இறந்த நிலையில், தந்தை வீட்டை விட்டு சென்று விட்டார். பாட்டி பராமரிப்பில் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். குணசீலனை தவிர மற்ற இருவரும் மதுரை வந்து, ஹோட்டலில் வேலை செய்கின்றனர். இவர், பி.காம்., இறுதியாண்டு தேர்ச்சி பெறவில்லை.
ஆறு மாதங்களுக்கு முன் மதுரை வந்த குணசீலன், ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார்; தினக்கூலியாக, 600 ரூபாய் பெற்றார். அந்த தொகையையும், தம்பியிடம் வாங்கிய, 50 ஆயிரம் ரூபாயையும், ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டில் இழந்தார். இதனால் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என, கருதுகிறோம். அவரது மொபைல் போனை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.
அரசு பஸ் டிரைவரை தாக்கிய ராணுவ வீரர்கள்; பயணியரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டியதால் பரபரப்பு
வேலுார் மாவட்டத்தில் இருந்து ராணுவ போர் தளவாடங்களை ஏற்றிய இரு கனரக வாகனங்கள், பெங்களூருக்கு நேற்று சென்று கொண்டிருந்தன.
பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை எனும் துணை ராணுவத்தினர் நான்கு வாகனங்களில் பின் தொடர்ந்தனர்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சோமநாதபுரம் அருகே, 12:30 மணிக்கு, ஓசூர் சென்ற அரசு பஸ், துணை ராணுவ வாகனங்களை முந்திச் செல்ல முயன்றது. வழிகேட்டு டிரைவர் தமிழரசு, தொடர்ந்து, 'ஹார்ன்' அடித்தார்.
இதனால், ராணுவ வாகனங்களை நிறுத்திய துணை ராணுவத்தினர், அரசு பஸ்சில் ஏறி டிரைவரிடம், 'மேடான பகுதி என்பதால், மெதுவாக செல்கிறோம்; அதற்குள் எத்தனை முறை ஹாரன் அடிப்பாய்' எனக்கூறி, லத்தியால் தாக்கினர். இதில், காயமடைந்த தமிழரசு ஆத்திரமடைந்து, பஸ்சை ராணுவ வாகனங்களுக்கு முன் சாலையின் குறுக்கே நிறுத்தினார். பயணியரும், 'டிரைவரை எவ்வாறு அடிக்கலாம்' என, துணை ராணுவத்தினரிடம் கேட்டனர்.
இதனால், துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை காட்டி, பயணியர் மற்றும் மக்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதிர்ச்சியடைந்த மக்கள், அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் குருபரப்பள்ளி போலீசார் அங்கு சென்றனர். துணை ராணுவத்தினர், அரசு பஸ் டிரைவர் மற்றும் மக்களை சமாதானப்படுத்தினர்.
மக்களிடம் துப்பாக்கியை காட்டியதற்காக, மத்திய தொழில் பாதுகாப்பு ராணுவ உதவி ஆய்வாளர் பிரதாப் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து, ராணுவ தளவாடங்கள் ஏற்றி வந்த வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன; மக்களும் கலைந்து சென்றனர். இந்த மோதலால் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லையில் வீடு புகுந்து 67 சவரன் நகை கொள்ளை
திருநெல்வேலி, குலவணிகர்புரம் பி.பி.சி., காலனியில் வசிப்பவர் செல்லதுரை. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்; தற்போது வக்கீலாக உள்ளார். இரு நாட்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். மாடி வழியே வீட்டினுள் புகுந்த கொள்ளையர் பீரோவில் இருந்த, 67 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.10 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர்.
ரெட்டியார்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மகராஜன் வீட்டிலும் பூட்டை உடைத்து, 2,000 ரூபாயை திருடிச் சென்றனர். இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆலை அலுவலர் குடியிருப்பில் 70 சவரன் நகை கொள்ளை
அரியலுார் மாவட்டம், ஆலத்தியூரில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலையில் சுதர்சன், 45, நாராயணன், 49, ஆகியோர் மேலாளர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும், ஆலையின் அலுவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி, வெளியூர் சென்றனர்.
நேற்று காலை, நாராயணன் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. அதுபோல, சுதர்சன் வீடும் உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டிருந்தன. அவர் திருப்பதிக்கு சென்றுள்ளதால், அவர் திரும்பிய பிறகே கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளின் விபரம் தெரியவரும். எனினும், 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துஉள்ளது.
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர், புரோக்கர் கைது
சேலம், குகையை சேர்ந்தவர் பழனிவேலு, 35. இவர் தன் தாய் பெயரில் உள்ள நிலத்தை, தன் பெயருக்கு மாற்ற, சேலம், தாதகாப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு புரோக்கர் தொழில் பார்க்கும் கண்ணன், 40, பழனிவேலுவை தொடர்பு கொண்டு, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பெயர் மாற்றம் செய்து கொடுப்பதாக தெரிவித்தார். பணம் கொடுக்க விரும்பாத பழனிவேலு, இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில், பழனிவேலு புகார் அளித்தார்.
போலீசார் அறிவுரை படி, நேற்று மதியம், 3:30 மணிக்கு புரோக்கர் கண்ணனிடம், ரசாயனம் தடவிய பணத்தை வழங்கினார். அவர் அந்த பணத்தை, சார் - பதிவாளர் செல்வப்பாண்டி, 52, வசம் கொடுத்தார். இதையடுத்து, மறைந்திருந்த போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்ச பணம், 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவர் வீடுகளிலும், தனித்தனியே போலீசார் சோதனை நடத்தினர்.
ரூ.3 கோடி கஞ்சா கடத்தல் ஒடிசா வியாபாரி கைது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கேரளாவிற்கு லாரியில் ரூ.3 கோடி மதிப்புள்ள 1200 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான வியாபாரி கிருஷ்ணகாந்த் பல்லாவ்வை 52, தனிப்படை போலீசார் ஒடிசாவில் கைது செய்தனர்.
காதல் பிரச்னையில் எஸ்.ஐ.,க்கு ‛குத்து'
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே குலசேகரப்பட்டினம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பவானி 20. இவர் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நர்சிங் முடித்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் சந்திரசேகர் 23, என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கோகுல் சந்திரசேகர் கன்னியாகுமரியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.
இருவரும் சில நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பவானியை காணவில்லை என பெற்றோர் குலசேகரபட்டினம் போலீசில் புகார் செய்தனர். நேற்று எஸ்.ஐ., ரவிச்சந்திரன் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி 26, மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் கோகுல்சந்திரசேகர் கழுத்தில் குத்த முயன்றார்.
அதனை எஸ்.ஐ., ரவிச்சந்திரன் தடுத்தார். அவரது வலது கையில் குத்து விழுந்தது. கோகுல் சந்திரசேகருக்கும் கழுத்தில் சிறிய காயம் ஏற்பட்டது. எஸ்.ஐ., ரவிச்சந்திரன்- திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பா.ஜ., பிரமுகர் கொலை: நக்சல் வெறிச்செயல்

சத்தீஸ்கரில், நீலகண்ட கக்கேம், என்பவர் பிஜாப்பூர் மாவட்டத்தில் உசூர் மண்டல பா.ஜ., தலைவராக, 15 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உறவினர்களின் திருமணத்திற்காக சொந்த ஊரான பைக்ராமிற்கு நேற்று முன் தினம் சென்றார். அப்போது, நீலகண்ட கக்கேம் வீட்டிற்குள் திடீரென நக்சல்கள் உள்ளே புகுந்தனர். குடும்பத்தினர், உறவினர்கள் சூழ்ந்திருந்த நிலையில், வெளியே தரதரவென இழுத்து வந்து அவரை, கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதுடன், வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதைப் பார்த்த நீலகண்ட கக்கேமின் குடும்பத்தினர் கதறி அழுதனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து, கைப்பற்றப்பட்ட 'வீடியோ' ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இந்த கிராமத்துக்கு, 150க்கும் மேற்பட்ட நக்சல்கள் வந்ததும், நீலகண்ட கக்கேமின் வீட்டிற்கு மூன்று பேர் மட்டுமே சென்று தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.
துணை ஜனாதிபதி பெயரில் மோசடி செய்தவர் கைது
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பெயரில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் போலி கணக்கு துவக்கி மோசடியில் ஈடுபட்ட, இத்தாலியில் வசிக்கும் இந்தியர் கைது செய்யப்பட்டார்; அவருக்கு உதவியவரும் கைது செய்யப்பட்டார்.