பிஜாப்பூர்-சத்தீஸ்கரில் பா.ஜ., பிரமுகரை, அவரது குடும்பத்தினரின் கண் முன்னே, நக்சலைட்டுகள் வெட்டி கொலை செய்தனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு நீலகண்ட கக்கேம், என்பவர் பிஜாப்பூர் மாவட்டத்தில் உசூர் மண்டல பா.ஜ., தலைவராக, 15 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் உறவினர்களின் திருமணத்திற்காக சொந்த ஊரான பைக்ராமிற்கு நேற்று முன் தினம் சென்றார்.
அப்போது, நீலகண்ட கக்கேம் வீட்டிற்குள் திடீரென நக்சல்கள் உள்ளே புகுந்தனர். குடும்பத்தினர், உறவினர்கள் சூழ்ந்திருந்த நிலையில், வெளியே தரதரவென இழுத்து வந்து அவரை, கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதுடன், வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதைப் பார்த்த நீலகண்ட கக்கேமின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து, கைப்பற்றப்பட்ட 'வீடியோ' ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த கிராமத்துக்கு, 150க்கும் மேற்பட்ட நக்சல்கள் வந்ததும், நீலகண்ட கக்கேமின் வீட்டிற்கு மூன்று பேர் மட்டுமே சென்று தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.