பால்கர்: மஹாராஷ்டிராவில், ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டதாகப் புதைக்கப்பட்டவர், உயிருடன் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரபிக் ஷேக், ௬௦. இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், ஜன., ௨௯ல் பால்கர் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தை கடந்த ஒருவர், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இறந்தவர் குறித்த விபரம் தெரியாததால், ரயில்வே போலீசார் இவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இதைப் பார்த்து, பால்கர் பகுதியில் இருந்து வந்த ஒருவர், ரயில்வே போலீசை அணுகி, இறந்தவர் தன் சகோதரர் ரபிக் ஷேக் என்றும், இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, ரபிக் ஷேக்கின் மனைவி வரவழைக்கப்பட்டு, சடலம் அடையாளம் காணப்பட்டது. அதன்பின், இறந்தவரின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினரால் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம், நண்பர் ஒருவர் தவறுதலாக, ஷேக்கை அவரது மொபைல் போனில் அழைத்துள்ளார். உடனே, ஷேக் போனை எடுத்து பதிலளித்துள்ளார். இதனால், இறந்து போனவர் எப்படி பேசுவார் என நண்பர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின், இருவரும் 'வீடியோ' அழைப்பில் பேசியுள்ளனர். இதையடுத்து, நண்பர்கள் மற்றும் ஷேக்கின் குடும்பத்தினருக்கு, ஷேக் உயிரோடு இருக்கும் தகவல் பறந்துள்ளது.
பால்கரில் சபலா என்ற இடத்தில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் ஷேக் இருப்பது தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஷேக் என கருதி புதைக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் குடும்பத்தினரை தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.