சென்னை,-'அதானி' குழும விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுதும் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் பற்றிய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு பார்லிமென்ட் குழுவின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.
எல்.ஐ.சி., - எஸ்.பி.ஐ., வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், மத்திய அரசு முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து, பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுதும் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை அண்ணாசாலை, தண்டையார்பேட்டை எல்.ஐ.சி., அலுவலகங்கள்; போரூர், அடையாறு எஸ்.பி.ஐ., வங்கிகள் அருகே உட்பட, ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டங்களில், முன்னாள் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மத்திய அரசையும், அதானி குழுமத்தையும் கண்டித்து, காங்கிரசார் கோஷம் எழுப்பினர். அப்போது, தடையை மீறி பேரணி நடத்த முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.