வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-'கன மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் ஏற்பட்டுள்ள இனங்களில், 2.47 ஏக்கரான ஹெக்டேருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
![]()
|
அறிக்கை
வங்கக்கடல், அதன் அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில், ஜன., 29ல், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, 30ம் தேதி வலுப்பெற்றது.
இதனால், தமிழக டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை, மழை நீர் சூழ்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சக்கரபாணி மற்றும் உயர் அலுவலர்கள், நேற்று முன்தினம் கன மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து, கன மழையால் ஏற்பட்ட பாதிப்பு, அதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
நேற்று தலைமை செயலகத்தில், கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முதல்வரை சந்தித்து, அமைச்சர்கள் விவரித்தனர்; சேதம் தொடர்பான அறிக்கையை அளித்தனர்.
20 ஆயிரம் ரூபாய்
அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி, நிவாரண தொகுப்பை முதல்வர் நேற்று அறிவித்தார். அதன் விபரம்:
கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு, வருவாய் துறை மற்றும் வேளாண் துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்
அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவீதம்; அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில், 2.47 ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த, இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக, 2.47 ஏக்கருக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படும்
![]()
|
நெல் தரிசில் உளுந்து தெளித்து, கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய, 50 சதவீதம் மானியத்தில், 1 ஏக்கருக்கு, 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்
கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நெல் அறுவடையை உடனடியாக மேற்கொள்ள, வேளாண் பொறியியல் துறை வழியே, 50 சதவீதம் மானியத்தில், நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்
பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டு இருந்தால், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.