சிவகாசி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டையில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் நாயை கொன்று போட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்வதற்காக நேற்று தொட்டி மேல் பணியாளர்கள் ஏறினர். தொட்டிக்குள் இறந்த நாய் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் நாயை கொன்று 50 அடி உயரம் உள்ள தொட்டியில் ஏறி போட்டுள்ளனர்.
ஊராட்சி தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். சிவகாசி டி.எஸ்.பி., தனஞ்செயன் தொட்டியில் ஏறி ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் நாயை கொன்று போட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கால்நடை துறையினர் பிரேத பரிசோதனை செய்வதற்காக நாய் உடலை கொண்டு சென்றனர். தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதல் நாள் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் மக்கள் இதனை பயன்படுத்தவில்லை. எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.