வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை-சென்னை விமான நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்ட, உள்நாட்டு நகரங்களுக்கு மாறிச் செல்லும் புதிய வசதியை, மூன்று நாட்களில், 2,500 பயணியர் பயன்படுத்தி உள்ளனர்.
![]()
|
சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, இம்மாதம், 4ம் தேதி துவங்கி வைத்தார்.
அதே நாளில், உள்நாட்டு நகரங்களுக்கு பயணியர் மாறிச்செல்லும் புதிய வசதியையும், அவர் துவங்கி வைத்தார். இந்த வசதியை, ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
உள்நாட்டு பயணியர், மற்ற நகரங்களுக்கு சென்னை வழியாக மாறி செல்லும்போது, வெளியே சென்று மீண்டும் புறப்பாடு முனையம் வழியாக செல்ல வேண்டி இருந்தது.
இதனால், அதிக நேரம் பிடிப்பதுடன், தேவையில்லாத சிரமத்தையும் அவர்கள் எதிர் கொள்ள வேண்டி இருந்தது.
இதையடுத்து, சென்னை வந்து இறங்கும் பயணியர், வெளியே சென்று, புறப்பாடு முனையத்திற்கு வருவதற்கு பதில், உள்நாட்டு வருகையில் இருந்து, உள் புறமாகவே புறப்பாடு முனையத்திற்கும் மாறிச் செல்லும் புதிய வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
![]()
|
இதன்படி, உள்நாட்டு பயணியர் மீண்டும் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை; நேர விரயமின்றி, விமானத்திற்கு உடனடியாக செல்ல முடியும்.
இதனால், சென்னை வர வேண்டிய விமானம் தாமதமாக வந்தாலும், சென்னையில் இருந்து புறப்படும் விமானத்தை எளிதில் பிடித்து விட முடியும். இந்த வசதியை, மூன்று நாட்களில், 2,500 பேர் பயன்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement