பொள்ளாச்சி;'புரவிபாளையம் கிராமத்தில் குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது,' என, புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம் பகுதி மக்கள், சப் - கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம், புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி, புரவிபாளையம் கிராமத்தில், தனியார் நிறுவனம் குவாரி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம் வந்துள்ளதாக வருவாய்துறை வாயிலாக தெரியவந்துள்ளது. இங்கு குவாரி வந்தால் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
குவாரியை சுற்றி தோட்டங்களில் இருக்கும் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு பாதிப்படையும். வெடி பொருட்கள் பயன்படுத்தி பாறைகளை உடைக்கும் போது, கற்கள் குவாரியை சுற்றி, 500 மீ., சுற்றளவுக்கு பறந்து விழுவதால் கால்நடைகள், விவசாய தொழிலாளர்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
குவாரி செயல்படும் போது பாறை பொடிகள் காற்றில் கலந்து, விவசாய பயிர்களின் மேல் படிந்து விளைச்சலை பாதிக்கும். இதுபோன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்புள்ளது. எனவே, குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.