உடுமலை;அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நடமாடும் உளவியல் ஆலோசனை மைய திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த கல்வித்துறை முயற்சிக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் பல்வேறு சுற்றுப்புற சூழ்நிலைகளால், மனதளவில் பாதிக்கப்பட்டு தவறான வழிகளில் செல்கின்றனர். இவ்வாறு செல்வதை தவிர்க்கவும், மாணவர்களுக்கு மனரீதியாக கவுன்சிலிங் அளிப்பதற்கும், நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தில், மாவட்டத்துக்கு ஒரு உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். வேன் வாயிலாக, பள்ளிகளுக்குச்சென்று வளர்இளம் பருவ மாணவர்களுக்கு குழுவாகவும், தனித்தனியாகவும் ஆலோசனை வழங்குவதோடு, தொடர்ந்து அவர்களை கண்காணிக்கவும் செய்தனர்.
மேலும், தேர்வு நேரங்களில் தேர்வு பயத்தை நீக்கி, தயார்படுத்துவதற்கும் இத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சில மாவட்டங்களில், இரண்டு மாவட்டத்துக்கு ஒரு ஆலோசகர் வீதம் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஆலோசனை வகுப்புகளில் சிக்கல் ஏற்பட்டது.
கூடுதல் ஆலோசகர் நியமிக்க ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
கொரோனா காலத்தின்போது, பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால், ஆலோசனை மையத்திட்டமும் முடங்கியது.
கடந்த, 2020 கல்வியாண்டு முதல், முற்றிலுமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு முழுமையாக பயனிக்கும் பட்சத்தில், கல்வித்துறை அதிகாரிகள் ஆர்வத்தோடு இத்திட்டத்தை விரிவுபடுத்தாமல் மாற்றாக நிறுத்தப்பட்டது பள்ளிகளுக்கும் அதிருப்தி அளித்துள்ளது.
மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு, தீர்வு காண்பதற்கென துவக்கப்பட்ட இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
உளவியல் ஆலோசகர் அருள்வடிவு கூறியதாவது:
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை கட்டாயம் தேவையாகவே உள்ளது. அதிலும், கொரோனாவுக்கு பின் என்ற காலகட்டத்தில், பல மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமில்லாமல் கவனச்சிதறலுடன் உள்ளனர்.
இத்திட்டத்தின் வாயிலாக, மாணவர்கள் தவறான வழிகளில் செல்வதை துவக்கம் முதலாக தடுக்க முடியும். மேலும், அவர்களின் பிரச்னைகளை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.