உடுமலை;சத்துணவு மற்றும் அங்கவாடி ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் சார்பில், உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்சவேணி தலைமை வகித்தார்.
இதில், சிறப்பு ஓய்வூதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அகவிலைப்படியுடன் கூடிய சட்டபூர்வ பென்சன், 7,850 வழங்கவும், சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு பென்சன் என்ற அரசு ஆணையை மாற்றி, குடும்ப ஓய்வூதியமாக மாற்ற வேண்டும்.
பணியில் உள்ளவர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகிகள், பரிபூரணம், எல்லம்மாள், தங்கவேல், ராமநாதன் மற்றும் அரசு ஊழியர் சங்கம் வட்ட கிளைச்செயலாளர் வெங்கிடுபதி, ஓய்வு பெற்றோர் சங்கம் பாலகிருஷ்ணன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடிமங்கலம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு உதவி தலைவர் பாலசரஸ்வதி தலைமை வகித்தார்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வு), ஜெயப்பிரகாஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சத்துணவு ஊழியர் சங்கம்(ஓய்வு) அம்சவேணி நன்றி தெரிவித்தார்.