உடுமலை:உடுமலை பகுதிகளில், தக்காளி மகசூல் குறைந்துள்ள நிலையில், விலையும் தொடர் சரிவை சந்தித்து வருவதால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விளையும் தக்காளியை, விவசாயிகள் உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் விவசாயிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரமாக, உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், வியாபாரிகள் வருகை குறைந்ததால், விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
கடந்த மாதம், 14 கிலோ கொண்ட பெட்டி, 350 ரூபாய் வரை விற்று வந்த நிலையில், தற்போது, ரகத்திற்கு ஏற்ப, 160 முதல், 200 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.
தொடர் பனி மற்றும் திடீர் மழை காரணமாகவும், தக்காளி செடி மற்றும் காய்கள் பாதித்து, மகசூல் குறைந்துள்ள நிலையில், விலை சரிவால், விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தக்காளி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
நோய் தாக்குதல், சீதோஷ்ண நிலை மாறி அதிக பனிப்பொழிவு மற்றும் திடீர் மழை காரணமாக, தக்காளி செடிகள் மற்றும் காய்கள் பாதித்துள்ளன.
அறுவடை செய்த பழங்களில், பெருமளவு அழுகி வீணாகி வருகிறது. இந்நிலையில், உடுமலை சந்தையில், தொடர்ந்து விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
தக்காளி பெட்டி, பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு கூட கட்டுபடியாகாத நிலை உள்ளது. தக்காளி விலை வீழ்ச்சியை தடுக்க, சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கவும், தக்காளி சாஸ் தொழிற்சாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.