- நமது நிருபர் -
திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அம்மா உணவகம் பெயர், அம்மா மருத்துவமனை உணவகம் என மாற்றப்பட்டு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தின் பல பகுதிகளில், ''அம்மா மருத்துவமனை உணவகம், இட்லி ஒரு ரூபாய், சாம்பார், தயிர் சாதம், ஐந்து ரூபாய்'' என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அம்மா உணவகம் என்றிருந்ததை, அம்மா மருத்துவமனை உணவகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது, பலருக்கும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த போது , 'பத்தாண்டுக்கும் மேலாக மருத்துவமனை பழைய நுழைவு வாயில் அருகே அம்மா உணவகம் செயல்படுகிறது.
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணி நடப்பதால், மெயின் ரோட்டில் இருந்து உணவகத்துக்கு செல்ல வழியில்லை. உணவகம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள புதியதாக அறிவிப்பு மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.