பொள்ளாச்சி;'கார்டு' வராததால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ரயில் காலதாமதமாக கிளம்பியது. இதனால், வேலைக்கு செல்வோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு, தினமும் காலை, 7:25 மணிக்கும், கோவையில் இருந்து மாலை, 6:15 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. தினமும், 400க்கும் மேற்பட்டோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி கோவைக்கு சென்று வருகின்றனர். அதில், வேலைக்கு செல்வோரே அதிகளவு ரயில் பயணத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து நேற்று காலை ரயிலுக்கு செல்லும் பயணியர் வழக்கம் போல வந்தனர். ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தனர். ஆனால், 8:00 மணிக்கு மேலாகியும் ரயில் கிளம்பவில்லை.
'ரயில் கார்டு' வந்த பிறகே ரயில் கிளம்பும், என, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணியருக்கு தகவல் கிடைத்தது. அதிருப்தியடைந்த பலரும் பஸ்சில் கோவை சென்றனர்.
ரயில் பயணியர் கூறியதாவது:
பொள்ளாச்சியில் இருந்து, காலை, 7:25 மணிக்கு கிளம்பி, 8:45 மணிக்கு கோவைக்கு செல்லும். ஆனால், இன்று (நேற்று) ரயில் தாமதமானது. இதுகுறித்து விசாரித்த போது, திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளம் அருகே 'சிக்னல்' பிரச்னையால் தாமதமாக வருகிறது. அந்த ரயிலில் தான், கோவை ரயிலுக்கான, 'கார்டு' வருகிறார். அவர் வந்த பிறகே ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வழக்கமாக, காலை, 5:20 மணிக்கு வந்து, 5:40 மணிக்கு கிளம்பும் அமிர்தா எக்ஸ்பிரஸ், நேற்று காலை, 9:10 மணிக்கு தான் வந்தது. அதன்பின், காலை, 9:15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து ரயில் கிளம்பி, 10:10 மணிக்கு கோவையை அடைந்தது. இதனால், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்வோர் பாதிப்புக்குள்ளாயினர்.
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வரும் என முன்கூட்டியே தகவல் தெரிந்ததும், அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து இருக்கலாம். இனி வரும் காலங்களில், இதுபோன்று பிரச்னை ஏற்படாமல் இருக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
மாலையிலும் தாமதம்!
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு, மாலை, 6:15 மணிக்கு இயக்கப்படும் ரயில் நேற்று தாமதமானது. இந்த ரயில் தைப்பூசத்துக்காக திண்டுக்கல் வரை இயக்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மேல் தான், கோவையில் இருந்து கிளம்பியது, என, பயணியர் தெரிவித்தனர்.