வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கட்டாயமாக தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக மொழிவாரி சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை எழுதுவதை கட்டாயமாக்கி 2016ல் அரசாணை வெளியிடப்பட்டது.இதை எதிர்த்து தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2019ல் அளித்த உத்தரவில் 2020, 2021, 2022 கல்வியாண்டுகளில் தமிழ் மொழி தேர்வை எழுதுவதற்கு அவர்களுக்கு விலக்கு அளித்திருந்தது.
இந்நிலையில் தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இதுவரை தெலுங்கு, கன்னடா, உருது, மலையாளம் போன்ற மொழிகள் கட்டாய மொழிப் பாடங்களில் இருந்தன. இவற்றை நீக்கி தமிழ் மொழியை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் வாயிலாக தாய் மொழியை கற்கும் வாய்ப்பு தமிழகத்தில் உள்ள மொழிவாரி சிறுபான்மையினரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. எங்கள் தாய் மொழியில் படிப்பதை எதிர்க்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கடந்தாண்டு செப்.ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை எழுதுவதற்கு மொழிவாரி சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக அமர்வு குறிப்பிட்டுள்ளது.மேலும் வரும் ஜூலையில் இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவை பிறப்பிப்பதாகவும் அமர்வு குறிப்பிட்டுள்ளது.