வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஆதரவாக அறிக்கை விடுமாறு, கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., தலைமை நெருக்கடி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.
![]()
|
மறைந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில், அவரது நினைவிடம் அருகே, 81 கோடி ரூபாயில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கியது.
கருத்துக் கேட்பு கூட்டம்
கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதி என்பதாலும், கடலில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கடும் எதிர்ப்பு எழுந்ததாலும், கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில், ஜன.,31ல் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற மீனவர் சங்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பா.ஜ., - நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கடலில் கட்டுமானங்களை மேற்கொண்டால், கடல் ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் ஆபத்து உள்ளது.
கடல் அரிப்பு, கடல் உள்வாங்கும் ஆபத்து ஏற்படும் என, பலரும் கருத்து தெரிவித்தனர்.
'பேனா நினைவுச் சின்னம் அமைத்தால், அதை உடைப்பேன்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பேனா நினைவுச் சின்னம் அமைக்க எழுந்த கடும் எதிர்ப்பால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி உள்ளனர்.
'ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் மட்டும் முதல்வர், அமைச்சரிடம் வருகிறீர்கள். ஸ்டாலினின் திட்டமான பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு வருகிறது; நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். கருத்து கேட்பு கூட்டத்திற்கு கூட செல்லவில்லை.
'எதிர்க்கட்சிகளிடம், தி.மு.க., மட்டுமே போராட வேண்டியுள்ளது. அண்ணாமலை, சீமான் அனைவருக்கும், தி.மு.க.,வினர் மட்டுமே பதிலளிக்க வேண்டியுள்ளது. பேனா நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக, உடனே அறிக்கை விடுங்கள்' என, நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
முக்கிய அமைச்சர்களும், கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளனர்.
![]()
|
கடும் கோபம்
அதைத் தொடர்ந்தே, 'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்கிறார்கள்' என, தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை வெளியிட்டார்.
'எதிர்ப்பை பொருட்படுத்த வேண்டாம்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ; 'பேனா நினைவுச் சின்னம் அவசியம்' என, வி.சி., தலைவர் திருமாவளவனும் கருத்து தெரிவித்தனர்.
ஆனாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள், பேனா நினைவுச் சின்னத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காததால், தி.மு.க., தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.