உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 27, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, 22, நிறைமாத கர்ப்பிணியான ரேவதியை, பிரசவத்திற்காக, உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்திருந்தனர்.
நேற்று காலை 10:15 மணிக்கு, ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பிருந்தா, பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்க, ரேவதியின் உறவினர் லதா உடனிருந்துள்ளார்.
அப்போது, ரேவதிக்கு பிறந்த குழந்தை, அழுவதற்கு பதிலாக 'நான் வந்துட்டேன்' எனக் கூறியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதையடுத்து, பொதுமக்கள் பலர் அம்மருத்துவமனையில் திரண்டு, பிறந்ததும் பேசியதாக கூறப்படும் குழந்தையை ஆச்சரியமுடன் பார்த்து சென்றனர்.
இது குறித்து, களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாய்ராஜ் கூறியதாவது: பிரசவத்தின் போது நான் அங்கு இல்லை. பிரசவம் பார்த்த செவிலியர், குழந்தை பிறந்ததும் அழவில்லை. மாறாக பேசியதாக கூறி, நம்புகிறார். குழந்தை பேசியதாக கூறுவது நம்பத் தகுந்ததாக இல்லை. இவ்வாறு அவர்கூறினார்.