கோவை : தொழுநோய் பாதிப்பு குறைந்த மாவட்டமாக கோவைக்கு விருது பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தொழுநோயானது பல்வேறு நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவையும் தொழுநோய் இல்லாத நாடாக மாற்ற மத்திய சுகாதார துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழுநோய் பாதிப்பு குறைந்த மாவட்டங்களை தேர்வு செய்து விருது வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், தொழுநோய் பாதிப்பு குறைந்த மாவட்டமாக கோவை கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தொழுநோய் ஒழிப்பு துறை துணை இயக்குனர் சிவக்குமாரி கூறியதாவது:
தொழுநோய் பாதிப்பு குறித்து எங்கள் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 800க்கும் மேற்பட்டோர் மூலம் கணக்கீடு நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது, 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டு, 67 பேர் குணமடைந்துள்ளனர்.
வரும், 2025ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் தொழுநோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் தொழுநோய் குறைந்த முதல் மாவட்டமாக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். இதற்கு கடந்த, 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, மத்திய சுகாதார துறையிடம் அளிக்க வேண்டும்.
இதையடுத்து, டெல்லியில், சுகாதார துறை அமைச்சகம் மூலம் விருது வழங்கப்படும். விரைவில் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. பிற மாவட்டங்களை பொறுத்தவரை கோவையில் தான் பாதிப்பு குறைவாக உள்ளது. இதன் மூலம் நமக்கு விருது கிடைக்க வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.