வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கராச்சி : துபாயில் காலமான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல், கராச்சியில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் கல்லறையில் அடக் கம் செய்யப்பட உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்,79, 'அமிலாய்டோசிஸ்' என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சிகிச்சை பெற்று வந்தார்.
தேசத்துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு பாகிஸ்தானில் வீட்டுசிறையில் இருந்த அவர், மருத்துவ சிகிச்சைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்ற அனுமதியுடன் 2016ல் துபாய் சென்றார்.

சிகிச்சை பலனின்றி துபாயில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பழைய ராணுவ கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் விமானப்படை விமானம் அல்லது தனி விமானம்வாயிலாக அவரது உடல் நேற்று மதியம் கராச்சி விமான நிலையம் வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. உடலை கொண்டு வருவதற்கான சில ஆவணங்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று அவரது உடல் கராச்சிவந்தடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உடலை சுமந்து வரும் விமானத்தில் பர்வேஸ் முஷாரப்பின் மனைவி சாபா, மகன் பிலால் மற்றும் மகள் ஆகியோர் உடன் வருகின்றனர்.