வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இணைய வழி குற்றங்கள், சென்னை பெருநகரில் அதிகரித்து வருகின்றன. தினம் 100 புகார்கள் பதிவாவதால், அதை தடுக்கும் நடவடிக்கையில், 'சைபர் க்ரைம்' போலீசார் தீவிர விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டில் 154 வழக்குகள் பதியப்பட்டு, 25 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவில் சைபர் க்ரைம் தடுப்பு பிரிவு செயல்படுகிறது. அதேபோல, 10க்கும் மேற்பட்ட துணை கமிஷனர் அலுவலகங்களிலும், சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையங்களில், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யு டியூப், வாட்ஸ் ஆப், ஜி மெயில்' போன்ற சமூக வலைதளம் மற்றும் இணையதளம் வாயிலாக நடக்கும் சைபர் க்ரைம் தொடர்பாக விசாரிக்கப்படுகிறது.
சென்னையில் தற்போது, 'சிம்பாக்ஸ்' வாயிலாக, வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பண மோசடி நடந்து வருகிறது.
உச்சபட்சமாக, சமீபத்தில் தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக வங்கி கணக்கில், 'கீ லாக்கர்' என்ற மென்பொருளை பயன்படுத்தி மர்ம நபர்கள் ஊடுருவினர். ஒரே நாளில், 2.61 கோடி ரூபாயை சுருட்டினர்.
இது தொடர்பாக, டில்லியில் பதுங்கி இருந்த, நைஜீரியாவைச் சேர்ந்த எக்கேன் காட்வின், 37, அகஸ்டின், 42, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 1.05 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.

'சைபர் கிரைம்' போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் மொபைல் போனுக்கு, தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க உதவி செய்வதாக, செயலி ஒன்றின் 'லிங்க்'கை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர்.
அந்த வாலிபர், லிங்க் கை ஓப்பன் செய்தபோது, மர்ம நபர்கள், இவரின் கடன் அட்டையில் இருந்து, 2.77 லட்சம் ரூபாயை, 'அபேஸ்' செய்துள்ளனர்.
'பான்' கார்டு புதுப்பிப்பு, அமேசானில் பார்ட் டைம் ஜாப், கிரிப்டோ கரன்சியில் முதலீடு, ஓ.எல்.எக்ஸ்., செயலியில் பொருட்களை வாங்கும்போது, 'க்யூ ஆர் கோடு' அனுப்பியும் மோசடி நடக்கிறது.
சைபர் க்ரைம் குற்றவாளிகள், நாளுக்கு நாள் புதிய யுக்திகளை கையாள்கின்றனர். எனவே பொதுமக்கள், அறிமுகம் இல்லாத நபர்களிடம், 'ஆன்லைன்' வாயிலாக எவ்வித தகவல் தருவதை கைவிட வேண்டும்.
சைபர் கிரைம் தொடர்பாக, தினமும், 100க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. 2022ல், 150 வழக்கு பதியப்பட்டு, 25 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான வெளி மாநிலங்களைச் சேர்ந்த 30 பேர் உட்பட, மொத்தம் 87 பேர் கைதாகி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கைவரிசை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதம் 70 முதல் 80 புகார்கள் பதிவாகின்றன. கடந்த 2022ல் மட்டும் 900 பேர், சைபர் க்ரைமில் சிக்கி பாதிக்கப்பட்டதாக புகார் உள்ளது. 2021 முதல் தற்போது வரை, சைபர் க்ரைமில் சிக்கியோர் 7 கோடி ரூபாயை இழந்துள்ளனர். இதில், 4 கோடி ரூபாய் உடனடியாக மீட்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022ம் ஆண்டில், 603 புகார்கள் வந்தன. அவற்றில், 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை, 10 கோடி ரூபாய் வரை பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் பதிவாகியுள்ளது. இதில், 2 கோடி ரூபாய் வரை முடக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, குற்றவாளிகளிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு உள்ளது.
முத்துவும் முப்பது திருடர்களும்!
சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில், 99 குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் 105 குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில், போலீசார் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, சைபர் க்ரைம் பற்றி, 'முத்துவும் முப்பது திருடர்களும்' குறித்த புத்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூட்டத்தில், 1,727 பேர் பங்கேற்றனர். சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள 'க்யூ.ஆர்., கோடு - ஸ்கேன்' செய்து, இந்த விழிப்புணர்வு புத்தகத்தை வாசிக்கலாம்.
எவ்வகையில் நடக்கிறது திருட்டு?
l 'லைன், வீ சாட்' போன்ற சமூக வலைதளத்தில், யாரென தெரியாமல் 'சாட்டிங்' செய்வோரிடம், '250 ரூபாய் அனுப்பினால் அந்தரங்க வீடியோ காணலாம்' என, மூளை சலவை செய்து, அவர்களின் வங்கி கணக்கில் இருந்தும், மிரட்டியும் பணம் பறிக்கப்படுகிறது.
l 'ஆன்லைன்' ரம்மி, டி.ஜி.பி., உள்ளிட்ட ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மேயர்களின் படங்களை, 'வாட்ஸ் ஆப்' முகப்பு படமாக பதிவு செய்து, அதன் வாயிலாக தெரிந்தவர்களிடம் பணம் கேட்பதுபோல் மோசடி நடக்கிறது. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி பேரில்கூட மோசடி நடந்திருக்கிறது
l கடன் செயலியில் பணம் வாங்குவோர், பணத்தை திருப்பி கட்ட தவறினால், பணம் பெற்றவரின் படங்களை தவறாக பயன்படுத்தி, அவருக்கு தெரிந்தோரின் மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பி பணம் பறிக்கின்றனர்
l பொதுமக்களுக்கு சேவை அளிப்பதாக கூறி, மொபைல் போன் எண்ணிற்கு 'லிங்க்' அனுப்பி, அதன் வாயிலாக பணம் களவாடப்படுகிறது.