திருத்தணி: திருத்தணியில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும், நகராட்சி போலீசார் அனுமதியின்றியும், பேனர் வைப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதை தடுக்கவும், அகற்ற முடியாமல் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ளதால், தினமும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதுதவிர, திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது அத்தியாவசிய பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், காஞ்சிபுரம் - -திருப்பதி செல்லும் வாகனங்கள், திருத்தணி நகர் வழியாக தான் சென்று வருகின்றன. இதனால், 24 மணி நேரமும், திருத்தணியில் போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.

இந்நிலையில், அரசியல் கட்சியினர். தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், நகராட்சியில் மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து 'பிளக்ஸ்' பேனர்கள் வைத்து வருகின்றனர். சில பேனர்கள் பல நாட்கள் தொடர்ந்து இருக்கின்றன.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்காமல், நகராட்சியில் மாநில மற்றும் நகராட்சி சாலைகளில் சுப நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு 'பிளக்ஸ்' பேனர்களை, திருத்தணியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், நகராட்சியில் 'பிளக்ஸ்' பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என, பலமுறை அறிவுறுத்தியும் அதை கடைபிடிக்காமல் அதிகாரிகள், போலீசார் அலட்சியம் காட்டுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், திருத்தணிக்கு நேரில் வந்து பார்வையிட்டு, அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் வைத்துள்ள பேனர்களை அகற்றி, எச்சரிக்க வேண்டும் என, திருத்தணி நகர மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நகராட்சி ஆணையர் ராமஜெயம் கூறியதாவது:
நகராட்சியில் பேனர்கள் வைப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் அனுமதியின்றி பேனர்கள் வைத்துள்ளனர். சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி பேனர்கள் மட்டும் எங்கள் ஊழியர்கள் அகற்றி விடுவர். அரசியல் கட்சி பேனர்கள் போலீசார் தான் அப்புறப்படுத்த வேண்டும்.
அவர்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால் எங்கள் ஊழியர்களை அனுப்பி வைப்போம். இது தான் சட்ட விதி. ஆகையால், ஓரிரு நாளில் நகராட்சியில் அனைத்து பேனர்கள் அகற்றப்பட்டு, நகராட்சியில் பேனர் வைக்கக்கூடாது என, வாகனம் வாயிலாக ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்துகளை உருவாக்கும் பேனர்
நகராட்சியில் சாலையோரம் பேனர்கள் வைப்பதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்துகளை உருவாக்கும். மேலும், பேனர்களால் சில சங்கடங்களும் உருவாகி மோதல் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே, நகராட்சியில் பேனர் வைப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
- எஸ். முனுசாமி, சமூக ஆர்வலர், திருத்தணி.
நகராட்சி புகார் கொடுத்தால் நடவடிக்கை
திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் கூறியதாவது:நகராட்சியில் பேனர் வைப்பவர்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பேனர் வைக்கும் இடம் மற்றும் எவ்வளவு கட்டணம், எத்தனை நாட்கள் என, தெரிந்துக் கொண்டு கட்டணம் செலுத்திய ரசீது காண்பித்தால் மட்டுமே போலீஸ் அனுமதிக்கப்படும் இதுதான் நடைமுறை.
ஆனால், தற்போது நகராட்சியில் வைத்திருக்கும் பேனர்களுக்கு எந்த வித அனுமதியும் போலீஸ் சார்பில் வழங்கப்படவில்லை. ஆகையால், தனிப்படை போலீசார் அமைத்து நகராட்சியில் பேனர்கள் ஓரிரு நாளில் அகற்றப்படும். மேலும், பேனர்கள் வைப்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் புகார் கொடுத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.