தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி:
தமிழகத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி என்ன செய்தாலும் பயனில்லை. உதயசூரியன் உதித்தபடியே தான் இருக்கும். நல்ல தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சிறந்த கொள்கை உடைய, உறுதியான தொண்டர்களை கொண்ட ஆட்சி, தமிழகத்தில் நடக்கிறது.

அப்ப, 2011ல் இருந்து, 10 வருஷமா தமிழகத்தில், 'உதயசூரியன்' உதிக்கலையே... உங்க உறுதியானதொண்டர்கள் எல்லாம் ஊருக்கு போயிருந்தாங்களா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மோசடியை கண்டித்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு மாதங்களை கடந்தும் போராட்டம் நீடிக்கும் நிலையில், இந்தச் சிக்கலை தீர்க்க, தமிழக அரசின் சார்பில், இதுவரை பயனளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

'புதுசா ஆலை நிர்வாகத்தை எடுத்தவங்க, ஆளுங்கட்சிக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க'ன்னு விவசாயிகள் வெளிப்படையாகவே சொல்றாங்களே... அப்புறம் எப்படி நடவடிக்கை எடுப்பாங்க?
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி:
தமிழகத்தில் கொங்கு மண்டலம், அ.தி.மு.க., கோட்டை என்பது தவறான கருத்து; அது, முதல்வரின் கோட்டை. இந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு பின், ஈரோடு அ.தி.மு.க.,வின் கோட்டை இல்லை; தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பது தெரியும்; பொறுத்திருந்து பாருங்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழகத்தில் ஆட்சியை இழந்தாலும், பிரதான எதிர்க்கட்சியாக, அ.தி.மு.க.,வை அமர வைத்தது கொங்கு மண்டலம் தான்... இவரு அதை, 'தி.மு.க., கோட்டை'ன்னு சொல்லி, சும்மா வாயால வடை சுட பார்க்கிறாரு!
ம.தி.மு.க., தலைமை நிலையச் செயலர் துரை பேட்டி:
தமிழகத்தில், புகையிலை, குட்காவுக்கான தடையை விலக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்கி உள்ளதால், தமிழகத்தில், புகையிலை பயன்பாட்டுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அப்படியே, புற்றுநோயை உருவாக்கும் சிகரெட்டுக்கும் சேர்த்து தடை விதிக்க சொல்லுங்களேன் பார்ப்போம்!
கரும்பு விவசாயிகள் சங்க, சிவகங்கை மாவட்ட தலைவர் தண்டியப்பன் பேட்டி:
சிவகங்கை மாவட்டத்தில், கரும்பு விவசாயிகளுக்கு மட்டும், தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், 73 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அதுபோல, தமிழகத்தில் உள்ள, 26 தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகை, 1,275 கோடி ரூபாயாக உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு, உரிய ஊக்கத்தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு வாழ்க்கையே போராட்டமா மாறிடுச்சு... அப்படி போராடியதால் தானே, பொங்கலுக்கு அரசு கரும்பு கொள்முதல் செய்தது!