வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: ‛‛ஹிந்துத்வா மற்றும் மனுதர்ம கோட்பாடுகள், வன்முறையை ஆதரிக்கின்றன என '' கர்நாடக காங்., எதிர்க்கட்சி தலைவர், சித்தராமையா பேசியுள்ளது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கர்நாடக மாநிலம், கல்புராகியில் முன்னாள் காங்., எம்.எல்.ஏ., பி.ஆர். பாட்டீலின் வாழ்க்கை வரலாறு தொடர்பான, புத்தக வெளியீட்டு விழா, நேற்று (பிப்.,6) நடந்தது. புத்தகத்தை கர்நாடக முன்னாள் காங்., முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: ஹிந்துத்துவா இந்திய அரசியலைப்புக்கு எதிரானது. ஹிந்துத்வா என்பதும், ஹிந்து தர்மம் என்பது வெவ்வேறானவை.

நானும் ஹிந்து தான்; ஆனால் நான் ஹிந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. மனுதர்மம் மற்றும் ஹிந்துத்வா ஆகியவற்றை எதிர்க்கிறேன். எந்தவொரு மதமும், கொலை, வன்முறையை ஆதரிப்பதில்லை. ஆனால், மனுதர்மம் மற்றும் ஹிந்துத்வா ஆகியவை கொலை, வன்முறை, பிரிவினையை ஆதரிக்கிறது. இவ்வாறு, அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்முறையல்ல
சித்தராமையா இதுபோல் பேசுவது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக, கடந்த ஜனவரியிலும், ‛நான் ஹிந்து தான் ; ஆனால், ஹிந்துத்வாவை எதிர்க்கிறேன்,' எனக் கூறியிருந்தார். உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும், ராமர் கோயில், அரசியல் லாபத்துக்காக கட்டப்பட்டு வருவதாகவும் சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். கடந்த பிப்.,4ம் தேதி கர்நாடக, கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுகானை, ‛முட்டாள்' எனக் கூறியதுடன், கால்நடைகளுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.