வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி உள்ளிட்ட 5 பேர் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வைகை வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ‛நீதிபதியை நியமிக்கும் போது அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளிடம் கொலிஜியம் கருத்து கேட்கும். பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தான் கொலிஜியம் தங்களுக்கு பரிந்துரை அளித்துள்ளது. மனுதாரர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும்' எனக் கேள்வி எழுப்பினர்.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், ‛நானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவனாக இருந்திருக்கிறேன்' எனக் கூறினார். விசாரணையின் முடிவில் விக்டோரியா கவுரி பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
பதவியேற்பு

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகிய 5 பேரும் இன்று (பிப்.,7) பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.