சேலம்: ஓமலுார் அருகே 'பம்ப்' மூலம் நீரை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, மக்களுடன் சென்று ஊராட்சி தலைவர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலுார் ஒன்றிய ஊராட்சி தலைவர்களான, தேக்கம்பட்டி சுதா, மூங்கில்பாடி செல்வி, வெள்ளாளப்பட்டி சியாமளாதேவி தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர், சேலம் கலெக்டர் கார்மேகத்திடம் நேற்று அளித்த மனுவில்
கூறியிருப்பதாவது:
எங்கள் கிராம வாழ்வாதாரமாக விவசாய தொழில் மட்டுமே பிரதானமாக உள்ளது. கிராமம் அருகே 'டேன்மேக்' நிறுவனம் (மேக்னசைட்), மைன்ஸ் (வெள்ளை கல் குவாரி) உள்ளது. அதன், 200 அடி ஆழத்தில் இருந்து நீரை 'பம்ப்' வைத்து வெளியேற்ற ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. நீரை வெளியேற்றினால் எங்கள் பகுதி முழுதும் நிலத்தடி நீர்மட்டம் குறையும். சுற்றுவட்டார பகுதிகளில், 15 கி.மீ., வரை கிணறுகள் வறண்டு விடும். இதனால், 25 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதரத்தை காக்க, இந்த நீரை வெளியேற்றாமல் எங்கள் பகுதியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.