அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ., தந்துள்ள மொத்தக் கடன் ரூ.27,000 கோடி என்பது நிகரக் கடன்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு மற்றும் சொத்துக்களுக்கு ஈடாக தான் கடன் தரப்பட்டுள்ளது, பங்குகளுக்காக கடன் தரப்படவில்லை என்பதால், அவை நிர்வகிக்கக் கூடிய அளவிலேயே இருக்கிறது என கடன் ஆய்வு நிறுவனமான கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் நிதி ஆய்வு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை உலக முதலீட்டாளர்களை அச்சத்திற்குள்ளாக்கியது. அதானி குழுமம் கணக்குகளில் மோசடி செய்ததாகவும், பங்கு விலையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாகவும் கூறியது. அடுத்த சில நாட்களில் அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பில் 10 ஆயிரம் கோடி டாலரை இழந்தது. இதனையடுத்து அதானிக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள், அதில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மீது கவனம் திரும்பியது. பொதுத் துறை வங்கிகளான எஸ்.பி.ஐ., பஞ்சால் நேஷனல் வங்கி உள்ளிட்டவை பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தந்துள்ளன. எல்.ஐ.சி., நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால் இவற்றின் பங்குகளும் கடந்த வாரத்தில் சரிவைச் சந்தித்தன.
எனவே, இந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு என்ற வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டு தெளிவுப்படுத்தி வருகின்றன. டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில், அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ., தந்துள்ள கடன், மொத்த கடனில் 0.88 சதவீதம் அல்லது ரூ.27,000 கோடி. இந்தக் கடன்களில் பெரும்பாலானவை பணமாக்கக் கூடிய சொத்துக்களுக்கு ஈடாக தரப்பட்டவை. பங்குகளுக்கு ஈடாக கடன்கள் வழங்கப்படவில்லை என ஆர்.பி.ஐ.,யிடம் தெரிவித்துள்ளது.
![]()
|
கடந்த வாரம், எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா, அதானி குழுமம் கடன்களை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி வந்துள்ளது. அதானி குழும திட்டங்களுக்கு உறுதியான சொத்துக்கள் மற்றும் போதுமான பணப்புழக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே கடன் வழங்கியுள்ளோம்” என்று கூறினார்.