வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அறிவியல் தமிழுக்கு அடித்தளம் அமைத்த அறிஞர்களுள் ஒருவரான மணவை முஸ்தபாவின் நினைவு தினத்தில் அவர் சார்ந்த இந்த பதிவு.
சர்வதேச நிறுவனமான யுனெஸ்கோ, உலக நாடுகளின் பல்வேறு மொழிகளில் "கூரியர்" என்ற பெயரில் பத்திரிகைகளை நடத்தி வந்தது. அந்த வகையில் தமிழ் மொழியிலும் "கூரியர்" வெளிவந்தது. சேத்துப்பட்டில் உள்ள "உஸ் சென்டர்" என்று அழைக்கப்படும் "உலகப் பல்கலைக்கழகச் சேவை மையம்" என்ற கட்டடத்தில் கூரியர் பத்திரிகை அலுவலகம் இருந்தது.
"கூரியர்" பத்திரிகை ஆசிரியராகவும் அலுவலகப் பொறுப்பாளராகவும் தொண்டாற்றி வந்தவர்தான் மணவை முஸ்தபா. இந்த பத்திரிக்கையைப் பயன்படுத்தி, அவர் ஆற்றியத் தமிழ்த் தொண்டு மகத்தானது. "தமிழ் மொழியானது நவீன அறிவியலுக்குப் பொருந்தி வருமா?" என்ற கேள்விக்குறி எழுந்தபோது, அந்த சவாலைச் சந்தித்துச் சாதித்துக் காட்டிய முதல் மனிதர் மணவை முஸ்தபா. அவர்தான் அறிவியல் கலைச் சொற்களுக்கான வார்த்தைகளைத் தொடர்ச்சியாக "கூரியர்" இதழிலும் தனிப்பட்ட அறிக்கைகளிலும், நூல்களிலும் வெளியிட்டார். அவருக்குப் பின் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த குழந்தைசாமி இந்த பணியை தொடர்ந்தார்.
"கூரியர்" இதழின் மீது ஆதிக்கம் செலுத்தச் சிலர் முனைந்தனர். ஆனால் மணவை முஸ்தபா முளையிலே கிள்ளி எறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கூட்டத்தார் மணவை மீதான அவதூறுகளைக் கிளப்பிவிடத் தொடங்கினர். "கூரியர்" சர்வதேசத் தலைமையகத்திற்கு அவர்கள் புகார்களையும் தட்டி விட்டனர். "இதன் மூலம் மணவை முஸ்தபாவின் பதவி பறிபோய்விடும். அதைக் கைப்பற்றலாம்" என்ற முயற்சியில் இறங்கினர். அவர்களின் புகார் அடிப்படையாக வைத்து, ஒரு விசாரணைக் குழுவை யுனெஸ்கோ நியமித்தது. தமிழக உயர் தகுதி மிக்கப் பிரமுகர்களைக் கொண்டதாக விசாரணைக் குழு இருந்தது. "இந்த குழுவின் அறிக்கையை வைத்தே மணவை முஸ்தபாவின் மீது நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது முடிவாகும்" என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தமிழ்நாடு தமிழாசிரியர் பேரவையின் பொதுச் செயலாளராக இருந்த புலவர் புகழேந்தி களமிறங்கினார். அவரின் நோக்கங்கள் இரண்டு. அறிவியல் தமிழுக்குத் தொண்டாற்றும் ஒரே பத்திரிக்கையாக அப்பொழுது இருந்த "கூரியர்" இதழைத் காப்பாற்றியாக வேண்டும். மணவை முஸ்தபா, நேர்மையானவர் என்பதை நிரூபித்து, அவர் பதவியைக் காப்பாற்றியாக வேண்டும். இந்த எண்ணத்தின் படி புகழேந்தி அந்த விசாரணைக் குழுவில் இருந்த ஒவ்வொரு பிரமுகரையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார். அவர்களிடம் புகழேந்தி வைத்த வாதங்கள் இரண்டு.
"மணவை முஸ்தபா குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டுத் தமிழுக்கு மகுடத்தைச் சூட்டும் அறிவியல் சேவையில் ஈடுபட்டு வருபவர். இந்த விசாரணைக் குழு," மணவை முஸ்தாபா தவறு இழைத்தார்" என்ற அறிக்கையைச் சர்வதேசத் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்தால் என்னவாகும்? அவர்கள் மணவை முஸ்தபாவை நீக்குவது மட்டுமல்ல. " கூரியர்" பத்திரிகையை நிறுத்திவிடுவார்கள். அறிவியல் தமிழுக்கே என்று வந்த இதழைக் காப்பாற்ற வேண்டுமென்றால் மணவையையும் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதே புகழேந்தியின் எண்ணம்.

"மணவை முஸ்தபாவின் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை., போலியானவை" என்று அறிக்கை சர்வதேசத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் மணவை முஸ்தபாவின் பதவி தக்க வைக்கப்பட்டது மட்டுமல்ல. "கூரியர்" தப்பிப் பிழைத்தது. மணவை முஸ்தபாவின் நினைவு கூர்ந்திடும் நாளான இன்று (பிப். 6) இந்த வரலாற்றை நேர்மையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். "தினமலர்" ஆசிரியராக இருந்த இரா. கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் "தமிழ் எழுத்துச் சீர்திருத்த இயக்கம்" துவக்கப்பட்டுச் சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலகட்டத்தில், அந்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக உடனிருந்து உழைத்தவர் மணவை முஸ்தபா. "அறிவியல் தமிழை வளர்த்தெடுப்பதற்குத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அவசியம்" என்பதே அவரின் கோட்பாடு.
இந்த இயக்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கெடுத்து, அரிய ஆலோசனைகளையும் உழைப்பையும் வழங்கிக் கொண்டே இருந்தார். அந்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக "தினமணி" ஆசிரியர் ஏ.என்.சிவராமனும் இருந்தார். இந்த வரலாற்று உண்மைகளைத் துல்லியமாகச் சொல்வதற்குத் தரவுகள் எப்படிக் கிடைத்தன என்பது முக்கியம்.
அந்த காலகட்டத்தில் "தினமலர்" செய்தியாளராக மட்டுமன்றி,, அப்போதைய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் அனைத்துத் தமிழ் இயக்கத் தொண்டுகளிளும் நான் செயல்பட்டு வந்தேன். இயக்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தியின் வழிகாட்டுதலின்படி, அவரின் நிதியைக் கொண்டு அனைத்துப் பணிகளையும் ஏற்பாடு செய்தேன்.
அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த அரங்க நாயகத்தையும் ராஜா முத்தையா செட்டியாரையும் வைத்து சிவராமன் தலைமையில் நாங்கள் மாநாடு நடத்தியதும், அதில் மணவை முஸ்தபா பெரிய பங்களிப்பை வழங்கியதும் இங்கே குறிப்பிட வேண்டிய அம்சம். மணவை நடக்க இயலாமல் சிரமப்பட்டு இருந்த காலகட்டத்தில் உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு நடந்தது. அதில் அவர் சக்கர நாற்காலியில் வந்து கலந்து கொண்டார்.
மாநாட்டையொட்டிச் சிறப்பு மலரை வெளியிட்டு, அளப்பரியத் தொண்டை "தினமலர்" புரிந்தது. மணவையின் மகன் டாக்டர் செம்மல், தன் தந்தை ஏற்படுத்திய தமிழ் அறக்கட்டளை மூலமாகத் தொண்டை தொடர்கிறார்.
- ஆர்.நூருல்லா, ஊடகவியலாளர்
9655578786