வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரா : உத்தரபிரதேச மாநிலத்தில், கார் ஒன்றில், 10 கி.மீ., துாரத்துக்கு, மனித உடல் அடித்து இழுக்கப்பட்டு வந்த, சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவையும், ஆக்ராவையும் இணைக்கும் யமுனா விரைவுச்சாலையில், இன்று (பிப்.,7)ம் தேதி கார் ஒன்றில் மனித உடல் அடித்து இழுக்கப்பட்டு வருவதை, மதுரா சுங்கச்சாவடி காவலர் ஒருவர் பார்த்துள்ளார்.
அவர், கொடுத்த தகவலின்படி, டேஹாட் எஸ்.பி., ட்ரைகன் பைசன் தலைமையிலான போலீசார், உடலை மீட்டு, கார் ஓட்டுனரை பிடித்து விசாரிக்கின்றனர். போலீசார் விசாரணையில், காரை ஓட்டி வந்தவர், புதுடில்லியைச் சேர்ந்த, வீரேந்திர சிங் என, தெரியவந்துள்ளது.

எஸ்.பி., ட்ரைகன் பைசன் கூறுகையில்,' நேற்று இரவு சாலையில் நிலவிய மூடுபனியால், காரில் அடிபட்டு இறந்தவர் யார் என, தெரியவில்லை என, வீரேந்திர சிங் கூறியுள்ளார், இதையடுத்து, இறந்தவரின் அடையாளத்தை காண, கார் வந்த பாதையில் உள்ள, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்,' என்றார்.
கடந்த, ஜனவரி மாதம், 20 வயது இளம்பெண் அஞ்சலி சிங் என்பவர், டில்லி, சுல்தான்புரியில் இருந்து காஞ்ஹாவாலா வரை, 12 கி.மீ., துாரத்துக்கு, காரில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். தற்போது, அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.