வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட, கிறிஸ்டியன் மிக்கேலுக்கு ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.
2010-ம் ஆண்டு காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க் களுக்கு ஹெலிகாப்டர் வாங்க, பிரிட்டனைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன், ரூ.3,600 கோடி ஒப்பந்தத்தில் ரூ.423 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில், விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, சஞ்சீவ், கவுதம் கைத்தான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கில், 2017ல், சி.பி.ஐ., 30 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த ஊழல் விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட, கிறிஸ்டியன் மிக்கேல், 59, என்பவரை 2018-ம் ஆண்டு, துபாயில், சி.பி.ஐ., கைது செய்து நாடு கடத்தி கொண்டு வந்து டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். ஜாமின் கோரி கிறிஸ்டியன் மிக்கேல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் பெஞ்ச், உரிய முகாந்திரம் இல்லை என கூறி ஜாமின் வழங்க மறுத்தார்.