பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் மொபைல் போன் டவர்களை திருட மூளையாக செயல்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை மையமாக கொண்டு செயல்படும் 'ஜி.டி.எல்., இன்ப்ராஸ்ட்ரக்சர் லிட்' நிறுவனம் மொபைல் போன் டவர்கள் அமைப்பது, அதை பராமரிப்பது போன்ற பணிகளை செய்துவருகிறது.
இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் இந்நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட டவர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளதாக, பாலக்காடு கசபா போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜிவ் தலைமையிலான சிறப்பு படையினர்விசாரணை நடத்தி, திருட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட, சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிருஷ்ணகுமாரை, 46, கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் ராஜிவ் கூறியதாவது:
கடந்த, 2018ல் நஷ்டம் காரணமாக இந்நிறுவனம் சேவையை நிறுத்திக்கொண்டது. தொடர்ந்து, டவர்களின் செயல்பாடுகளும் முடங்கின; இருப்பினும், டவர்களை நிறுவனத்தினர் கண்காணித்து வந்தனர்.
கொரோனா சமயத்தில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படாததால், மொபைல் போன் டவர்கள் சில இடங்களில் திருடப்பட்டு உள்ளன.
நிறுவனத்தினர் அளித்த புகாரை அடுத்து நடத்திய விசாரணையில், பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் ஏழு டவர்கள் திருடப்பட்டது தெரியவந்தது. ஒரு டவர், 25 முதல், 40 லட்சம் ரூபாய் வரை விலை மதிப்பு கொண்டது.
அறிவியல் ரீதியான விசாரணையில் குற்றவாளிகள் குறித்த தடையங்கள் கிடைத்தன. இதையடுத்து திருட்டுக்கு மூளையாக செயல்பட்ட கிருஷ்ணகுமாரை கைது செய்துள்ளோம்; மேலும் பலர் கைதாக உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.